வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Saturday, December 25, 2010

மன்மதன் எய்த அம்பு.. வேண்டாம் இந்த வம்பு.


படத்துக்கான டைட்டிலை வச்சிட்டு அதை நியாயபடுத்த ரொம்பவே சிரம பட்டு கதாபாத்திரங்களின் பெயர்களை தேடி பிடித்து வைத்திருக்கிற மாதிரி நினைக்க தோணுது அந்த பெயர்கள்.. மன்னாரும் அப்புறம் அம்புஜாக்சியும்..
மன்னருக்கும், மதனகோபாலுக்கும், அம்புஜாக்ஷிக்கும் நடக்கும் சம்பவம் தான் இந்த மன்மதன் அம்பு.


படத்தை பத்தி சொல்லணும்னா , இந்த கதைய நம்ம விசுவிடமோ அல்லது S.V.சேகரிடமோ கொடுத்திருந்தால் எட்டுக்கு எட்டு அங்குலம் உள்ள இரண்டு நாடக அரங்கத்தை வைத்தே கதையை நன்றாக நகர்த்தி இருப்பாங்களோன்னு தோணுது. அந்த அளவுக்கு தான் இந்த படத்தோட திரைக்கதையோட வையிட்டே இருக்கு.

திரைதுறையிலே Operator, போஸ்டர் ஒட்டுறவன் வேலையை தவிர எல்லாத்திலேயும் மூக்கை நுழைக்க ஆசை படுகிற கமலின் ஈடுப்பாட்டை நாம் பாராட்டியே ஆக வேண்டும் ஆனால் இந்த படத்தோட திரை கதையை கிரேசி மோகனிடம் கொடுத்திருந்தால் இன்னும் நல்லா வந்திருக்கலாம்.

படத்தின் முதல் பாதி பார்க்க ஓரளவுக்கு நல்லாவே வந்திருக்கு... ஆனால் அதே எதிர்பார்ப்போட இரண்டாவது பாதியும் இருக்கும்னு எதிர் பாத்தீங்கன்னா ஏமாற்றமே மிஞ்சும்.. கதையை எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம நம்ம கமலும் , டைரக்டர் K.S.ரவிகுமாரும் முழிக்கிறது படத்தை பாக்க வருகிர பாமரனுக்கும் தெரியும் படியா அப்பட்டமா தெரியுது. அவ்வளவு சொதப்பல்கள் காமடி எங்கிற பேரில்..பம்மல் கே சம்மந்தம் , பஞ்ச தந்திரம் மாதிரி ஆரம்பம் முதல் கடைசி வரை கதாபாத்திரங்களை காமடியாக கொண்டு சென்ற இந்த ஜோடி இங்கே கோட்டை விட்டுருக்கிறார்கள்.படத்தில் கடைசி அரை மணி நேரம் என்ன நடக்குதுங்கிறதே தெரியல..

இந்த கதையை எடுக்க எதற்கு பிரான்ஸ், ஸ்பெயின் , இத்தாலி எல்லாம் போனாங்கன்னே தெரியலே.. யார் காசா இருந்தா என்ன, இப்படியா காசை கரியாக்குவது.. அந்த காசு ஸ்பெக்ட்ரம் மூலமா வந்த காசா இல்லையான்னு CBI விசாரிச்சதுக்கு அப்புறமாத்தானே தெரியும்..அந்த காசு ஒரு வேளை Hard Earned Money(?)யா இருந்தா , இந்த K.S. ரவிக்குமார் ரொம்ப தான் ஊதாரித்தனமா செலவு செய்திருக்க கூடாது.. அல்லது வெளிநாட்டு அழகையும், Luxury கப்பலின் அழகையும் தமிழனுக்கு இலவசமா காமிக்கனும்னு நினைதிருந்தாலும் அதிலும் ஏமாற்றமே.. ஒளிப்பதிவாளர் Manush Nandan புதிய வரா இருந்தாலும் , ஐரோப்பிய நாடுகளின் அழகை காமிக்க ரொம்பவே சிரம பட்டாலும் அந்த ஊர்களின் அழகையும் அப்புறம் Luxury கப்பல் MSC-Splendida வின் அழகையும் இன்னும் நல்லாவே காமிராவில் படம் பிடித்து காமிச்சிருக்கலாம்.ஏதோ அவங்க மட்டும் enjoy பண்ண படம் எடுக்க ஐரோப்பிய நாடுகளுக்கு போனது மாதிரி தெரியுது.அப்புறம் இது ஒரு தமிழ் படமா, மலையாள படமா அல்லது ஆங்கில படமாண்ணே தெரியல.. கமல் தமிழில் கவிதை எல்லாம் சொல்லி இருக்கிறதை பாத்தா இது தமிழ் படம் மாதிரி தான்.. ஆனால் கமல், மாதவன் மற்றும் சிலரை தவிர வேறு கதாபாத்திரங்கள் எல்லாமே பக்கத்து மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்ய பட்டு , அவர்கள் மொழியிலேயே நடிக்க வைக்க செய்திருக்கிறார்கள்... நம்ம மாதவன் அது தாங்க நம்ம மதன் அவரு ஒரு வியாபர காந்தம், எப்ப பாத்தாலும் இங்க்லிஷ் தான் பேசுராரு அதுவும் தண்ணியிலேயே..இது தமிழ் படமா இருந்தாலும் கண்டிப்பா நிறய இடத்தில் தமிழிலேயே சப்-டைட்டிலெ போட வேண்டி இருக்கு.மாதவன் யார் கூட பேசினாலும் ஆங்கிலம், Producer கதாபாத்திரங்கள் குஞ்சனும், மஞ்சு பிள்ளையும் மலையாளம்...கமலும் , திரிஷாவும் தான் எப்பவாவது தமிழில் பேசுறாங்க..அப்புறம் நம்ம சங்கீதாவும்..

கமல், மாதவன், த்ரிஷா மற்றும் சங்கீதா நடிப்பில் அவரவர் திறமையை நன்றாகவே காட்டி இருக்கிறார்கள்.. கமல் மற்றும் மாதவன் கூட்டணி அன்பே சிவம் மாதிரி நல்லவே workout ஆகியிருக்கு.. அதாங்க chemistry ன்னு சொல்லுவாங்களே அந்த கண்றாவி தான்..
அதே நேரம் சில கேரக்டர்கள் எதற்க்கு வந்தாங்கன்னெ தெரியல..உஷா உதுப்,ஒவியா மற்றும் சில பேர்கள்... மாதவனுக்கு முறை பெண்ணாக வரும் களவானியில் கலக்கிய ஓவியாவிற்க்கு மாதவனுக்கு ஒரு தடவை பஜ்ஜி செய்து கொடுக்கும் பாத்திரமாக முடிந்து விடுகிறது அவளின் கதாபாத்திரம்.. மலையாள காமெடி நடிகர்களான குஞ்சன் மற்றும் மஞ்சு பிள்ளை தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாகவே செய்திருக்கிறார்கள்..

ஆனா ஒண்ணுங்க, நம்ம கமல் திரையுலகில் நடிகைகள் எங்கெங்கே என்னென்ன எல்லாம் செய்யிவாங்கன்னு மாதவனை வச்சு அப்படியே புட்டு புட்டு வக்கிறாரு.. அந்த கேரவன் வண்டி உட்பட.

ரமேஷ் அரவிந்துக்கும் , கமலுக்கும் அப்படி என்ன உறவோ. அவர் இல்லாம நம்ம கமல் படமே எடுக்க மாட்டாரா? அவருக்கு கொடுப்பதற்காகவே கேன்சர் நோயாளி கேரக்டர்..

நீல வானம் பாட்டு அருமை .. அதை எடுத்திருக்கிற விதமும் கூட.. காட்சிகளை பின்னோக்கி ஓட விட்டுருக்கிறார்கள்.. ஆனால் பாட்டு மட்டும் முன்னோக்கி ஓடி இருக்கு நல்ல வேளை..

கமல் இந்த படத்திலும் பாகிஸ்தானையும், லஸ்கர் இ தோய்யிபாவையும் விட்டு வைக்க வில்லை.. விஜயகாந்த் , அர்ஜுனுக்கு அப்புறம் கமலாலும் அவர்கள் இல்லாமல் படம் எடுக்க முடிய வில்லை பாவம்.. அவரோட வெளிநாட்டு மனைவியை காஷ்மீரில் லஸ்கர் இ தோய்யிபாவிடம் இருந்து தான் காப்பாத்துறாரு.. அப்புறம் அதே மனைவியை கொடைகானனில் ஒரு விபத்தில் பலி கொடுக்கிறார். உபயம்: காரில் வைத்து நடக்கும் த்ரிஷா மற்றும் மாதவனின் சண்டை.

கமல் கவிதை திறனுக்கு ஒரு சபாஷ்.. த்ரிஷாவையும் கவிதையை தமிழில் பேச வைத்திருக்கிறார்.. கவிதையில் வரலட்சுமி விரதத்தை மையமாக வைத்து சாடியிருப்பது யாரையோ?
ஒரு நாடக மேடையில் வைத்து நடத்த வேண்டிய கதையை பிரமாண்டம் எங்கிற பேர்வழியில், ஊரு எல்லாம் சுற்றி எடுத்து முடித்திருக்கிறார்கள்.. மன்னிக்கவும் , முடிக்க கஷ்ட பட்டிருக்கிறார்கள்..

மன்மதன் விட்ட அம்பு.. ஆனால் இலக்கை அடையும் முன் சற்று முனை மழுங்கி போய் விட்டது..

Wednesday, August 11, 2010

இவர்களை யார் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக அங்கீகரித்தது?

முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் தி.மு.க. கூட்டணியில் இருக்கிற நிலையில், த.மு.மு.க.வின் ம.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் இழுத்துப் போட்டிருக்கிறார் ஜெயலலிதா.

இந்தச் சூழலில் த.மு.மு.க. தலைவரான பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் கேட்க பட்ட கேள்விகளும், பதிலும் மற்றும் அதற்க்கு பதிலுக்கு பதிலும்

கேள்வி:சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலங் கள் இருக்கிறது, அதற்குள் கூட்டணியை உறுதிப் படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்பது உங்களின் நிலைப்பாடு. ஆனா, சட்டென்று ஜெயலலிதாவை சந்தித்து, கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கிறீர் களே?

ஜவாஹிருல்லா:எங்களை சந்திக்க ஜெயலலிதா விரும்புகிறார் என்று செங்கோட்டையன் எங்களிடம் தகவல் தெரிவித் தார். இது குறித்து பலமுறை எங்களிடம் பேசவும் செய் தார் அவர். நாங்களும் மாநில நிர்வாகிகள் அடங்கிய உயர்நிலைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் விவாதித்தோம். இந்த கலந் தாலோசனையில் "தமிழக அரசியலில் தற்போது எந்த கூட்டணியிலும் நாங்கள் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பை நிராகரிப் பது அரசியல் நாகரிகம் கிடையாது. அதனால் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டு சந்திக்க லாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவை சந்தித்தோம். ஆக, கட்சியிட்ட கட்டளைப்படியே இந்த சந்திப்பு நடந்தது.

வாஸ்தவமான பேச்சு.. நல்ல நாகரீகம்.. எதிர் கட்சி தலைவர் அப்படிங்கிறதற்காக அவர் என்ன சொன்னாலும் செய்வீங்களா ? உங்களை முதலில் யார் அழைததாலும் போய் விடுவீர்களா? BJP, சிவசேனா முதலில் அழைதிருந்தால்? நீங்கள் சொல்லுவது போல் இது உங்கள் கட்சி இட்ட கட்டளையே தவிர முஸ்லிம் மக்கள் இட்ட கட்டளை அல்ல.

கேள்வி:ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து?

ஜவாஹிருல்லா:மிகவும் மரியாதையுடன் வரவேற்று உபசரித்த ஜெயலலிதா, "உங்களைச் சந்திச்சு நீண்ட காலமாச்சு' என்றார். ஆமாம்... எட்டு வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறோம் என்றேன். சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு என்ன மாதிரியான கோரிக்கைகள் இருக்கின்றன? என்று கேட்டார் ஜெயலலிதா. நாங்களும் தேசிய அளவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை விவரித்தோம். அதாவது, "இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்து ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் 2007-ல் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கை 2009-ல் நாடாளுமன்றத்திலும் வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்தக் கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு அக்கறை காட்டவில்லை. தேசிய அளவில் சிறுபான்மை யினருக்கு 15 சதவீதமும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு தரப்படுவது காலத் தின் கட்டாயம் என்று பரிந்துரைத்துள்ளார் ரங்கநாத் மிஸ்ரா. இவரின் பரிந்துரைகளை அமல்படுத்தப் போராடி வருகிறோம்' என்று விவரித்தோம். அத்துடன் எங்களின் இட ஒதுக்கீட்டிற்காக பாராளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றோம். இதனை ஏற்றுக்கொண்டார் ஜெயலலிதா. மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றார். அதற்கு நாங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

எட்டு வருசமாம் எட்டு வருசம்.. நீங்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன் நடத்திய சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கு பெற அந்த அம்மாவை அழைக்க சந்தித்ததை தானே சொல்லுறீங்க ? அந்த மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன். அந்த மாநாட்டில் ஜெ மன்னிப்பு கேட்டதும், அதற்க்கு பிறகு ஆட்சியில் வந்தவுடன் செய்த அட்டூழியங்கள் உங்களுக்கு மறந்து போச்சா?

இப்போ தான் சிறுபான்மையினருக்கு என்னென்ன கோரிக்கை இருக்குண்ணே கேட்டாங்களா ? இது வரை அவர் தமிழ் நாட்டில் வசிக்கவில்லையா?

ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு அக்கறை காட்டவில்லை என்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடைக்காதா என்று ஏங்கும் ஜேவிடம் முறை இடுவது நியாயமா அல்லது அவர் ஜே தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்து உங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையா ?


கேள்வி:கூட்டணியை உறுதிப்படுத்திக்கொண்டீர்கள்... சரி! கூட்டணியில் உங்களுக்கான இட ஒதுக்கீடு?

ஜவாஹிருல்லா:எத்தனை சீட்டுகள்? எந்தெந்த இடங் கள்? என்கிற பேர அரசியலை நாங்கள் விவாதிக்கவில்லை. அதுபற்றிய பேச்சும் அங்கு எழவில்லை. அ.தி.மு.க. கூட்டணிக்குள் நாங்கள் இருக்க வேண்டி விரும்பி, கூட்டணியில் நாங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதில் உடன்பாடு எங்களுக்கு இருந்ததால் மகிழ்ச்சியை தெரிவித்தோம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. இந்த தருணத்தில் இதை மட்டும்தான் சொல்ல முடியும்?

எப்படி பட்ட உடன்பாடு ? இதனால் முஸ்லிம் மக்களுக்கு எதாவது பலன் இருக்குமா ? அல்லது உடன்பாடு செய்ய சென்ற உங்களுக்கு மட்டும் தான் பலன் இருக்குமா ? இன்றளவும் மோடியுடன் தோழமை கொண்டுள்ள ஜெ அழைத்தவுடன் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து விட்டீர்களே , இது வரை நீங்கள் முஸ்லிம் சமுதாயத்துக்கு போராடினது எல்லாம் உங்களின் சுய நலனுக்காகவா? நீங்களும் ஒரு சராசரி அரசியல்வாதி என்று நிருபிச்சிட்டீங்களே.

கேள்வி:கூட்டணி உறுதின்னு நீங்கள்தான் சொல்கிறீர்கள். ஆனா, ஜெ.விடம் இருந்து அதுபற்றியான உறுதி எதுவும் வெளியாக வில்லையே? அதனால் தேர்தல் நேரத்தில் குறைந்த சீட்டுகளை ஒதுக்கி உங்களை ஏற்க வைப்பார், இல்லையெனில் கூட்டணியிலிருந்து கழட்டி விட்டுவிடுவார் என்கிற பேச்சு எதிரொலிக்கிறதே?

ஜவாஹிருல்லா:முஸ்லிம் சமூகத்தை ஜெயலலிதா ஏமாற்றமாட்டார்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணிக்குள் நாங்கள் இருக்க வேண்டுமென்பதால்தான் கார்டனுக்கு அழைத்துப் பேசுகிறார். இதுவே கூட்டணிக்கான உறுதிதான். எங்களின் உணர்வுகளுக்கும் உரிமை களுக்கும் கௌரவத்தை தரக்கூடிய அளவில் கூட்டணி அமையும். அதில் சந்தேகமில்லை.

ஜெயலலிதா ஏமாற்றமாட்டார்ங்கிற நம்பிக்கை இருக்கிறதென்று எதை வச்சு சொல்லுறீங்க? உங்களூக்கும், முஸ்லிம் சமுதாயத்துக்கும் ஏதாவது இந்த அம்மா செஞ்சிருக்கா அல்லது இது வரை சொன்ன வாக்குறுதியை தான் நிறைவேற்றியிருக்கா?. எப்படியாவது முஸ்லிம் ஓட்டுகளை வாங்கி மறுபடியும் ஊழல் ஆட்சி செய்ய அந்த அம்மா செய்யும் தந்திரம் இது என்பது கூடா உங்களுக்கு தெரியாதா அல்லது இப்போதே அடிப்பதில் எத்தனை சதவீதம் என்பதில் உங்களுக்கும் , அம்மாவுக்குமிடையே நீங்க்ள் மேலே சொன்ன அதே உடன்பாடா?
மக்களை நம்பாமல், மக்களுக்கு நல்லது செய்து பழக்கமில்லாமல் , யாகம் மட்டுமே செய்து ஆட்சிக்கு வர நினைக்கும் மந்திரவாதியுடன் கூட்டணி வைக்க உங்களுக்கு வெட்கம் இல்லையா?


கேள்வி:நரேந்திர மோடி ஆசிர்வாதத்தில் நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் கொல்லப்பட்டன. அந்த நரேந்திர மோடியை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து 45 வகையான பதார்த்தங்களை வைத்து விருந்து தந்தவர் ஜெயலலிதா. அந்த போயஸ் கார்டனில் நீங்களா? மோடி தோழியுடன் கூட்டணியா? என்று முஸ்லிம் அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றனவே?

ஜவாஹிருல்லா:குஜராத் கலவரம் 2002 பிப்ரவரியில் நடந்தது. அப்போது மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. இந்த கூட்டணியில் இருந்தவர் கலைஞர். பா.ஜ.க.வுடன் 1999-ல் தேர்தல் கூட்டணியை கலைஞர் வைத்தபோது மதவாத பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்று விமர்சனம் எழுந்தது. அதுபற்றி கவலைப்படாத கலைஞர், "அனலைத் தணிக்கும் தண்ணீராக பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் இருப்போம்' என்றார். ஆனால் குஜராத்தே பற்றியெரிந்த போது அதனைத் தடுக்க எந்த நடவடிக்கை யிலும் ஈடுபடவே இல்லை. நரேந்திர மோடியின் செயல் என்பது பா.ஜ.க.வின் செயல் திட்டம். அதனால் மோடியை மட்டும் தனியாகப் பிரித் துப் பார்க்கக் கூடாது. ஆக, அந்த வகையில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுமே கூட்டணி உறவு வைத்திருக்கிறது. இந்த உறவில் இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடில்லை. அதனால் அரசியலை அரசியலாகவே அணுக வேண்டும்.

மோடியையும். BJP யையும் பிரித்து பார்க்க கூடாது என்றால், நீங்கள் BJP க்கு எதிராக போராடாமல், மோடி என்ற தனி மனிதனை எதிர்த்து போராடியது ஏன்? உங்களுக்கு தேவை என்றால் , மோடியையும் , BJP யையும் சேர்ப்பதும், இல்லைஎன்றால் பிரித்து பார்ப்பதும் சரியா ? கலைஞரும் ,ஜெயும் BJP யுடன் கூட்டணி வைத்திருந்தாலும் , கலைஞர் மோடியை ஆதரிக்கவோ , அவருக்கு விருந்து படைக்கவோ இல்லை. ஜெ செய்தது போல முஸ்லிம் விரோத அரசும் கலைஞர் நடத்தவில்லை.

அரசியலை அரசியலாக அணுக வேண்டும் என்பது சரி தான்.. அதே சாக்கடையில் நீங்களும் வீழ்ந்து உங்களை தரம் தாழ்த்தி கொள்ள வேண்டுமா ? இந்த கேடு கெட்ட அரசியலை செய்ய ஏற்கனவே நிறைய கட்சிகள் இருக்கும்போது நீங்களும் அதை செய்யலாமா ? வன்னியருக்கு ஒரு ராமதாஸ் போல , முஸ்லிம்களுக்கு ஒரு ராமதாஸ் தேவையா ? முஸ்லிம் மக்களுக்கு தேவை என்னவென்றால் இஸலாத்தை பாதுகாக்க, அதை பரப்ப் ஒரு சமுதாய இயக்கமே அன்றி , அடுத்தவன் செய்யிறான் அப்படிங்கிறதுக்காக் அதே சாக்கடை தேவை இல்லை.. அதற்க்கு இங்கு ஏற்கனவே ஆட்கள் வரிசையில் நிற்க்கிறார்கள்..

இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லைண்ணு நீங்களே சொல்லும் போது, எதோ கொஞ்சமாவது நல்லது செய்த கலைஞரிடம் கூட்டணி வைக்காமல், நல்ல்து செய்தே பழக்கமில்லாத ஜெயிடம் கூட்டணி வைத்தது ஏன்?கேள்வி:தமிழகத்தில் முஸ்லிம்களின் முக்கிய கோரிக்கையான இட ஒதுக்கீட்டை வழங்கி யிருப்பது தி.மு.க.தான். இதற்காக, முஸ்லிம் சமூகமே கலைஞருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க.வுடனான உங்கள் நிலைப்பாடு முரண்பாடாக தெரிய வில்லையா?

ஜவாஹிருல்லா:முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர தி.மு.க. கடமைப்பட்டிருக்கிறது. காரணம் இதற்காகத்தான் 1967-லிருந்து தி.மு.க. வை கண்மூடித்தனமாக ஆதரித்து வந்தது முஸ்லிம் சமூகம்.

கண்மூடி தனமாக ஆதரித்து அதற்க்கு பலனும் கிடைத்த பிறகு , திடீரென்று ஜெயிடம் கூட்டணி வைக்க என்ன காரணம்? அப்படி அவர் உங்களுக்கு என்ன வாக்குறுதியை தந்து விட்டார்? இனியும் முஸ்லிம் சமுதாயம் கலைஞரை ஆதரிக்காது என்று உங்களுக்கு யார் சாசனம் எழுதி தந்தது? நான் ஒன்றும் தி.மு.க காரன் அல்ல , ஆனால் ஜெயை விட கலைஞர் தான் இனியும் எதாவது செய்வாரென்ற நம்பிக்கை இருக்கு.

கேள்வி:முஸ்லிம்களுக்கு பாதுகாவலராக எப்போதும் இருப்பது தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிதான். இந்த உணர்வுதான் த.மு.மு.க. தொண்டர்களிடம் இருக்கிறது. ஆனா, இதற்கு மாறாக கூட்டணி உறவு கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறதே?

ஜவாஹிருல்லா:த.மு.மு.க. தொண்டர்களிடம் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லவே இல்லை. எங்களின் எதிரிகள் யாரேனும் இப்படி கிளப்பிவிட்டிருப்பார்கள்

தொண்டர்களிடம் இப்படி பட்ட உணர்வு இல்லைன்னு நீங்க எப்படி உறுதியாய் சொல்ல முடியும் ? நீங்கள் கூட்டணி வைப்பதர்க்கு முன் எத்தனை தொண்டர்களை சந்தித்து அவர்களின் மன நிலையை அறிந்தீர்கள்? ஆனால் ஒன்று மற்றும் நிச்சயம் , நீங்கள் ஒன்றும் தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதிகள் அல்ல்.. நீங்கள் இப்படி இரண்டு பட்டு கிடப்பதால் அதன் பாதிப்பு மட்டும் என்னவோ முஸ்லிம் சமுதாயத்திற்க்கு மட்டும் என்பது நிச்சய்ம்.

Saturday, May 1, 2010

இவர்களால் மட்டுமே தமிழ் திரையுலகை காப்பாற்ற முடியும் .

முதல்லே நம்ம (தறு)தலயோட அசல் படம்.

ஆக்ஷன் படம் என்றாலும் அஜித்தின் அசல் குடும்ப கதைதான்! ஆமாம் பின்னே., சொத்துக்காக அஜித்தை கொல்லத்துடிக்கும் அவரது அண்ணன் - தம்பிகளின் ஆக்ஷனும், அதற்கு இவரது ரீயாக்ஷனும்தான் படம் என்றால் அசல் குடும்ப கதைதானே?.முதல் , இரண்டாம் தாரம் மகன்ளுக்குள் நடக்கும் சொத்து தகராறே கதை...இந்த சொத்து தகராறை சொல்ல பிரான்ஸ் வரை போயி தயாரிப்பாளரையும் கஷ்ட படுத்தி , நம்மளையும் கஷ்ட படுத்தியிருகிராய்ங்க இந்த பய புள்ளைங்க..

அப்புறம் நம்ம ஜோசெப் விஜயோட சுறா (புட்டுகிச்சு) படம்.

எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.(நன்றி தட்ஸ்தமிழ்)

இந்த படத்தை விஜய் மட்டும் நடிச்சிருந்தாலும் பரவாயில்லை. ஆன இந்த சன் பிச்சர்ஸ் அந்த படத்தை வாங்கின ஒரே காரணத்தினால டிவியிலே வேற ஒரு நிகழ்ச்சியும் பாக்க முடியல..அஞ்சு நிமிஷதுக்கு ஒரு தடவை கடலில் கிடக்கும் அந்த சுறா ட்ரைலர் செய்யும் அநியாயத்துக்கு சுனாமியே பரவாயில்லைண்ணு தோணுது.

நல்ல வேளை , அசல் படத்தை சன் பிச்சர்ஸ் வாங்கல..இல்லைண்ணா அவங்களும் அவங்களோட அசல் முகத்தை காட்டி நம்மள கொலயா கொன்னுருப்பாயிங்க .

நோகாம நொங்கு திங்கிற இந்த சன் பிக்சர்ஸ், யாரு படத்துல நடிச்சிருந்தாலும் பரவாயில்லை, யாரு இயக்குனாலும் பரவாயில்லை , சன் டிவியை வச்சே படத்தை ஓட்டி விடலாங்கிற தையிரியத்தினால கஷ்ட படுறது என்னவோ காசு கொடுத்து செட் அப் பாக்ஸ் வாங்கி வச்சிருக்கிற பொது ஜனம் உன்னை போல் ஒருவன்.

தமிழ் திரையுலகை அழிக்கிறவங்க இன்னும் நிறைய பேரு இருந்தாலும் , இந்த மூன்று பேரால தான் அழிவு மிகப்பலமா இருக்கு..

அதுனால இந்த திரையுலகை காப்பாற்ற இந்த மூன்று பேரும் முன் வர வேண்டும்..

அஜித் குமார் அவர்கள் பேசாம ரேஸ் பக்கம் போயி அதிலே மட்டும் கவனம் செலுத்தினாருண்ணா , இப்போ ரேஸ்ல 18ஆம் இடதுக்கு வந்த அவரால , எதோ 17 ஆவது இடத்துக்கு வந்த மாதிரியும் இருக்கும், தமிழ் திரை ரசிகர்களும் பிழச்சுக்குவாங்க.

நம்ம ஜோசெப் விஜய் அவர்கள், இனிமே படமே நடிக்காம, பேசாம கட்டி வச்கிருகிற மண்டபங்களுக்கும், கடைகளுக்கும் வாடகை வசூல் பண்ணினாலே போதும்.. தயவு செஞ்சு அரசியல் பக்கம் வந்து இங்கேயும் ஒரு குத்தாட்டமும் , நெஞ்செ இல்லாம பஞ்ச் டயலாக் பேசாமலும் இருந்தாலே அவருக்கு கோடி புண்ணியமா போகும்.

நம்ம சன் டீவி பேசாம , படம் தயாரிக்கிறத (மன்னிக்கவும் , புடிங்கி விக்கிறத) விட்டுட்டு ,படத்தை ரிலீஸ் பண்ணின அடுத்த நிமிஷமே வெற்றி நடை போடுகிறதுண்ணு இம்சையை குடுக்காம, எதோ நித்தியானந்தா போல் மற்றும் சில ஆனந்தாக்களின் படங்களை மட்டும் அப்பப்போ ஒளி பரப்பினாங்கன்னா எதோ அவஙக TRB ரேட்ட்டிங் ஏறின மாதிரியும் இருக்கும்.நம்மள காப்பாத்தின மாதிரியும் இருக்கும்.நமக்கும் வெளி உலகத்தில நடக்கிற ஆன வெளி உலகத்துக்கு தெரியாம நடக்கிற விசயத்தை பாத்து ஜொள்ளு விட்ட மாதிரியும் இருக்கும்.

நம்மையும் , இந்த தமிழ் திரையுலகையும் காப்பாற்ற் முன் வருவார்களா இந்த மூன்று பேரும்.. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இவர்களை திருத்த ஒராயிரம் "தமிழ்ப்படம்" வந்தாலும் முடியாது.

Friday, April 30, 2010

இந்த சலுகை ஏன் நித்தியானந்தாவுக்கு மட்டும் ?

நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்தாராம்.. உடனே அவரை பெண்கள் சிறையில் அடைச்சிட்டாங்களாம்.தாங்க முடியலடா சாமி ..

ஆமா எனக்கு ஒரு சந்தேகம்.. சிறையில் இருக்கும் நித்தியானந்தாவுக்கும் , கற்பழிப்பு குற்றம் செஞ்சு ஜெயிலுக்கு போனவனுக்கும் என்ன வித்தியாசம்..ஒருத்தன் எல்லாரையும் கற்பழிச்சிட்டு போலீசுகிட்ட மாட்டினா உடனே தான் ஒரு ஆம்பள இல்லைன்னு சொன்னா உடனே அவனை பெண்கள் சிறையில் அடைச்சுருவாங்களா ?

அட ஒரு வேளை அவன் ஆம்பளையா இல்லைன்ன சரி.. ஆனா ஒரு வேளை அவன் ஆம்பளைன்னா என்ன செய்வாங்க ? அவனோட மருத்துவ பரிசோதனை முடிவு தெரியும் வரை அவனை பெண்கள் சிறையில் வைத்திருந்தால் அவன் அங்கே இருக்கும் பெண்க்களை கற்பழிக்க மாட்டாண்ணு என்ன நிச்சயம் ?

சாதாரணா ரவுடியா இருந்தா கூட பரவாயில்லை கற்பழிச்சுட்டு போயிருவான்..அதோட முடின்ச்சுது.. ஆனா இந்த நித்தியானந்தா ஒப்பந்தம் போட்டு இல்ல் கற்பழிப்பான்.. "ஆன்மா விடுதலை பெற நிர்வாணமும் , உடலுறவும் முக்கியம்ணு எழுதி வாங்கி கற்பழிச்சவன் சிறையில் இருப்பவர்களிடம் "சிறையில் இருந்து விடுதலை பெற அதே நிர்வாணமும் , உடலுறவும் முக்கியம்ணு எழுதி வாங்கி கற்பழிக்க மாட்டான்னு என்ன நிச்சயம்.

அதெல்லாம் சரி.. அந்த பெண்கள் சிறையில் இருப்பவர்களுக்கு இவன் அங்கே இருப்பதால் வடிவேலு சொன்ன மாதிரி "சங்கடமா இருக்காது?".. சிறையில் இருந்தாலும் சிலருக்காவது மானம் , வெட்க்கம் இல்லாமலா போயிருக்கும் ?

அவன் ஆம்பளையா இல்லையான்னு பாக்குறது எப்படின்னு ஒரு நிமிஷத்துலெ கண்டு பிடிக்க ரெண்டு வயசான குழந்தைக்கே தெரியும்... அப்படி இருக்க , அவனுக்கு மருத்துவ பரிசோதனை செஞ்சு முடிவு தெரியற வரைக்கும் அவனை பெண்கள் சிறையில் அடைக்கலாமா ? அவன் பெண்கள் சிறையிலேயே ஒரு ஞான பீட கிளை ஆரம்பிக்கிர வரைக்கும் அவனை அங்கேயே வச்சிருக்க போறாங்களா ?

அவன் தன்னை தண்டனையிலிருந்து தப்பிக்க கண்டு பிடிசச ஒரு வழி தான் இது.. இதை கூட தெரிஞ்சிக்காம அவன் சொல்லுறதை எல்லாம் எப்படி இந்தா போலீசுக்காரங்க நம்புராங்க ?

எனக்கு என்னமே அவன் மேலும் மேலும் தப்பு செய்ய இந்த காவல் துறையும் துணை போகுதோன்னு தோணுது..அவனுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை ? அதன் ரகசியம் தான் என்ன ?

மேல இருந்தா அது நெஞ்சு , கீழ இருந்தா அது ..ஞ்சுன்னு முடிவு பண்ணுறத விட்டுட்டு , பெருச்சாளிய உள்ளே வச்சு கட்டு சோத்த கட்டுன கதையால்ல இருக்கு..

நல்ல வேளை.. அது காலியான் சிறையாம்..

Saturday, April 10, 2010

இது யாரும் சொல்லாத கதை

கி பி 1967 , நம்ம தமிழ் நாடு , தனி தமிழ் மாநிலமாக உருவான ஆண்டு...
அந்த தமிழ் நாட்டிலே பேரு வைக்காத ஒரு பசுமையான கிராமம் , அது தாங்க நம்ம பாரதிராஜா காமிரா open பண்ணினா வருமே அதே கிராமம்.அந்த கிராமத்தில ஒரு அழகான ஜோடி வாழ்ந்து வந்தாங்க .. அந்த நாயகன் ராணுவத்துல வேலை பாத்து கிட்டு இருந்தாரு.. வருசத்துக்கு ஒரு தடவை தான் ஊருக்கு வருவாரு நம்ம கதாநாயகன்..

ஊருக்கு வரும்போது நம்ம நாயகன் , தன்னோட அருமை மனைவிக்கு பரிசுகள் , நண்பர்களுக்கு மிலிடரி சரக்கு எல்லாமே வாங்கிட்டு தான் வருவாரு .. அவரு ஊருல இருக்குற நாட்கள் , ஊரே திருவிழா கோலம் பூத்திருக்கும் ..கையில் இருக்கும் காசு கரையும் வரை நண்பர்களுக்கு குறை இருக்காது.நம்ம நாயகனுக்கு காசை சேத்து வைக்க தெரியாது.. இதை வைத்தே வீட்டில் தினமும் சண்டை நடக்கும் ரெண்டு பேருக்கும்.

நம்ம் நாயகியும் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை..அவளும் அவளுக்கு தேவையான எல்லா பொருட்களும் , எவ்வளவு காசாக இருந்தாலும் வாங்கி கொள்வாள்.முக்கியமாக அவளுக்கு தேவையான அழகு சாதனங்கள் வாங்கி வீட்டையே நிரப்பி விடுவாள்.தன்னால் முடியா விட்டாலும் , தகுதியை மீறி கடன உடன வாங்கியாவது ஆடம்படர சாதனங்களையும், அழகு சாதனங்களையும் வாங்கியே பெரும் கடனாளி ஆக ஆக்கி விட்டாள் நம்ம நாயகி.. ஆனா புருசன் தண்ணிக்காக நண்பர்களுக்கு செல்வு செய்தா மட்டும் ரொம்ப கோப படுவாள்.

கி பி, 1971 டிசெம்பர் மாதம்...

இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் போர் மேகம் சூழ்ந்திருந்த நேரம்... போர் எப்போ வேணும்னாலும் வரலாம்.. ரெண்டு நாட்டு மக்களும் ஒரு வித பீதியிலேயே நாட்களை கடத்திக் கொண்டிருந்தனர்..

நம்ம நாயகன் விடுமுறை முடியவே இல்லை. அதற்குள்ளாகவே ராணுவ பணி இடத்திலிருந்து அவசர தந்தி வந்ததால் மனைவி மற்றும் நண்பர்களிடமிருந்து பிரியா விடை பெற்று அவசர அவசரமாக ரயில் பிடித்து இந்திய எல்லையை நோக்கி சென்றான் தன் தாய் மண்ணை காப்பதற்க்காக..

எல்லையில் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது..இரு நாட்டிலும் ஏகப்பட்ட உயிரிளப்புகளும், உடமை இளப்புகளுமாக போர் ரொம்ப கருவிக்ள் தன்னுடய திறமைகளல் கோர முகத்தை காட்டி கொண்டிருந்தது..

அந்த கொடிய தோட்டா ஒன்று நம்முடைய நாயகனை பதம் பார்த்து விட , அவன் நிலை குலைந்து மண்ணில் வீழ்ந்து விட்டான்.. அந்த தருவாயிலும் நம்மால் சொந்த நாட்டை காப்பாற்ற் முடிய வில்லயேன்னு கண்ணீர் விட்டு கொண்டிருந்த அவனுக்கு , அருமை மனைவியின் உருவமும் அவன் கண் முன்னே தோன்ற , எப்படியாவது எழுந்திருக்க முயர்ச்சி செய்தான்.. ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை இந்த உலகத்துக்கு விடை கொடுப்பதை தவிர ...

வீட்டில் முன் வாசலில் தபால் காரன் தந்தியுடன் நிர்ப்பதை பார்த்த உடனே அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதை ஊகித்து விட்டாள்.. தபால் காரன் தந்தியை படிக்க ஆரம்பிப்பதற்குள்ளே அவள் சுய நினவை இழந்து கீழே விழுந்தாள்..இந்த செய்தியை கேட்ட உடனே அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி விட அவளுக்கு ஆறுதல் சொல்ல ஊரே வீட்டின் முன் கூடி விட்டது.ஒரு வாரம் கழித்து கணவனின் சடலமும் வந்து சேர்ந்தது..

எல்லாம் சடங்குகளும் முடிந்து உறவுக்காரர்களும், ஊர்காரர்களும் அவரவர் வேலையை பார்க்க போய் விட்டார்கள்..அவள் மட்டுமே தனியே அழுது கொண்டிருந்தாள்..தான் தனிமை பட்டு விட்டதை உணர்ந்தாள்.. எதிர்காலம எப்படி இருக்கும் என்று தெரிய வில்லை.. கையில் காசும் இல்லை.. ஊர் முழுக்க வாங்கி போட்ட கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் தடுமாறினாள்.. இருந்த கொஞ்சம் காசை வைத்து நாட்களை ஓட்டினாள்.. உறவினர்கள் யாரும் எந்த உதவியும் செய்ய வில்லை. அவளால் அவர்களிடம் பண உதவி கேட்க தன்மானம் இடம் கொடுக்க வில்லை. கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.. இருந்த ஒரே வீட்டை விற்று கடனை அடைத்து விட்டு ஊருக்கு வெளியே ஒரு குடிசை கட்டி அதில் குடியேறினாள்.

கையில் இருந்த சாதனங்களை எல்லாம் விற்று நாட்களை ஓட்ட தொடங்கினாள். உதவி செய்யவும் யாரும் இல்லை, குழந்தையும் இல்லை.. யாருக்காக வாழ வேண்டும் என்று தனிமையில் ஏங்கினாள். நாட்கள் உருண்டோடியது.. நாட்கள் மாதங்களாகின, மாதங்கள் வருடமாகின.. வருடங்கள் போக போக வறுமையின் உக்கிரமும் கூடி கொண்டே சென்றது..அவளும் கிழவியாகினாள்.

சரி , ஏதாவது தொழில் செய்தோ, பலகாரம் விற்றோ பிழைக்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.. இறுதியாக வடை சுட்டு பிழைக்கலாம் என்று நினைத்து கையில் வைத்திருந்த கொஞ்சம் காசை வைத்து வடை சட்டி, எண்ணை , கடலை பருப்பு மற்றும் தேவையான சாதனங்களை வாங்கினாள்..தனது குடிசை பக்கத்திலேயே அதற்கான ஒரு மரத்தடி நிழலையும் தேர்வு செய்து ஒரு நல்ல நாளை பார்த்து தனது தொழிலை ஆரம்பித்தாள்.

பய பக்தியுடன் வடை சுட ஆரம்பித்தாள்.. வடையும் சுட்டு முடிச்சிட்டு அதை விற்பதற்காக ஒரு பாத்திரத்தில் அடுக்கி கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஒரு வடையை ஒரு காக்கா தூக்கி கொண்டு ஓடி விட்டது.. கொஞசம் தூரம் வடையை வாயில் கவ்வி கொண்டு ஓடிய காக்கா ஒரு மரத்தில் போய் அமர்ந்தது. அந்த நேரம் பார்த்து அந்த வழியாக வந்த காக்காவின் நண்பனான ஒரு திருட்டு நரி அதை பார்த்து விட , எப்படியாவது அந்த காக்காவிடம் இருந்து அந்த வடையை பறிக்க ஆசை பட்டு ரூம் போட்டு யோசித்து கொண்டிருக்க ஒரு ஐடியா கிடைத்து விட நரிக்கு ஒரே சந்தோசம்.. அப்புறம் காக்காவை பார்த்து "காக்கா காக்கா உன்னோட பாட்டு கேட்டு ரொம்ப நாட்கள் ஆகி விட்டது.. எனக்கு நீ புதிதாக வந்த காக்க காக்க படத்தில் வரும் ஒ மகசீயா பாட்டு பாடேன் என்று கேட்க இன்னுமாட நம்மள இந்த ஊரு நம்பிக்கிட்டுருக்கு அப்படின்னு நினச்சு ஒ மகசீய அப்படின்னு ஆரம்பிக்க வடை கீழே விழுந்தது. அதை எதிர்பாத்த நரி வடையை எடுத்து விட்டு ஒடியதை கூட பார்க்கமல எல்லா வரியையும் பாடி முடிச்ச பிறகே தன் பாட்டை நிருத்தி விட்டு கீழே பார்க்க அங்கே நரியும் இல்லை , வாயில் இருந்த வடையும் இல்லை..அப்புறம் அந்த காக்கா சொல்லிச்சாம்..

"வடை போச்சே!"

Thursday, April 8, 2010

இஸ்லாமிய சட்டங்களை அவமதித்த சானியா & சோய்ப் மாலிக்

எப்படியோ ஒரு அசிங்கமான தொடர் கதை ஒன்று முடிவுக்கு வந்து விட்டது.

இஸ்லாமிய சமுதாயத்தையும் , இஸ்லாமிய மக்களயும் அசைத்து பார்த்த ஆயிஷா சித்திகி ,சானியா & சோய்ப் மாலிக் சம்பந்த பட்ட ஒரு அசிங்கமான தொடர் கதை ஒண்ணு முடின்சிடிச்சுப்பா

இது வரை ஆயிஷா பற்றி சோயிப் சொன்ன கதைகள் எந்த அளவுக்கு உண்மை என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

உண்மையிலயே ஆயிஷா வேரு ஒரு பெண்ணின் படத்தை காட்டி ஏமாற்றினாளா ? அந்த அளவுக்கு ஒரு நாட்டின் கிரிகெட் கேப்டன் முட்டாளாக இருப்பாரா ?


இதை பற்றி ஒரு மூத்த இஸ்லாமிய பெரியவர் சொன்னார் இப்படி. " இந்த சம்பவத்தில் யாருமே வெற்றி பெறவும் இல்லை ஆனால் தன்னை ஏமாற்ற பயன் படுத்திய ஊர் பேர் தெரியாத அந்த பெண்ணின் புகைபடத்தை வெளியிடாத சோயிப் மாலிக்கை பாராட்டியே தீர வேண்டும்."

எட்டு வருசத்துக்கு முன்னால் "Telephonic Romance" ஆரம்பித்த போது இந்த படத்தை காட்டி தான் ஏமாற்ற பட்டதாக சோயிப் மாலிக் கூறி இருக்கிறார்.அந்த படத்தை பார்த்து தான் ஆயிஷா மீது காதல் வயப்பட்டாராம்.


இவ்வளவு வருடமாக அந்த படத்தில் இருந்த அழகான பெண்ணை தான் காதலிப்பதாக சோயிப் நினைத்து கொண்டு கனவுலகத்தில் மிதந்திருக்கிறார்.அதனாலேயெ அந்த அழகான பெண்ணுடன் தொலை பேசி மூலம் "நிக்காஹ்" முடுச்சிட்டாராம்.

அந்த புகை படத்தை தான் பார்த்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு அரசியல் வாதியும் சொல்லி இருக்கிறார்.படத்தில் இருக்கும் அந்த பெண் ரொம்ப அழகாக இருந்ததாகவும், இப்போது அவளுக்கு கல்யாணம் முடிந்து சந்தோசமாக இருகிறாள் என்றும் அவளை இந்த பிரச்சினையில் தேவை இல்லாமல் இழுக்க வேண்டாம்,அவளை பத்தி வேரு ஒன்றும் கேக்காதீஙக , அவளை விட்டுடுங்க என்றும் ,இவ்வளவு நடந்த பிறகும் அந்த படத்தை வெளியிடாத சோயிபுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார் அந்த அரசியல்வாதி.

இந்த முக்கோண காதல் கதை ஏகப்ப்ட்ட குழப்பத்தையும், சந்தேகங்களையும் கிளப்பி விட்டிருக்கிறது.

சானியா மிர்சா ஒரு பிரபலமான டென்னிஸ் வீராங்கணை மற்றும் கிர்க்கெட்டை தவிர வேறு ஒன்றும் தெரியாத மக்களுக்கு டென்னிசை பத்தி தெரிய வைத்து இந்தியாவிற்க்கே நம்பிக்கை நட்சசத்திரமாக இருப்பதால் அவருடைய ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் அலசப்படுகிற விசயமாக இருக்கிறது.

உண்மயை சொல்ல வேண்டும் என்றால் , சானியா மிர்சா சோயிப் மாலிக்குடனான திருமணத்தை அறிவித்த போது நம்மில் பெரும்பாலோனாவர்களுக்கு ஒரு வித பொறாமை ஏற்பட்டிருக்கும்.மேலும் அந்த அளவிற்க்கு இந்தியாவில் ஒரு முஸ்லிம் பையனக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதா என்று நினைத்து ஒரு வித சோர்வும் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் சோயிப் மற்றும் ஆயிஷாவின் இந்த தொலைபேசி நிக்காஹ் விவகாரம் வெளி உலகத்திற்க்கு தெரிந்த பிறகு , இதனால் இஸ்லாமிய சட்டங்களுக்கு நேர்ந்த அவமானத்தை பார்த்து ஒவ்வொரு இஸ்லாமியனும் வேதனை அடைந்து இருப்பான் என்பது நிச்சயம்..தொலை பேசியிலே ஒரு திருமணத்தை நடத்தி வைக்க முடியுமா என்று அடுததவர்கள் கேக்கும்போது என்ன பதில் சொல்வது ?

All India Muslim Personal Law Board உறுப்பினரான Kamal Farooqui சொல்லுறாரு இப்படி.

"இந்த மொத்த கதையில் வந்த மூணு பேருமே சுத்தமானவங்க இல்லை..நாட்டில் மிகவும் பிரபலமான சானியா போன்றவர்கள் அடுத்தவர்களுக்கு இதை ஒரு எடுத்து காட்டாக காட்டும் நிலைக்கு தள்ளி இருக்க கூடாது..அவர் எதை செய்தாலும் அது நல்லதோ , கெட்டடதோ , அது ஒரு மிகப் பெரிய தாக்கத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும்..அவர் மீது ஒவ்வொரு இந்தியனும் மிகப் பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிரார்கள். இப்போ அவர் துபாய் போய் குடியமர போவதாக சொல்லி இருக்கிறர். எப்படி அவரால் இதை செய்ய மனசு வரும். சோயிப் விளையாடும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் நடக்கும் போது யாருக்கு அவர் ஆதரவளிப்ப்பார்..இதை அவருடைய சொந்த விசயமென்று யாராவது சொல்லலாம்.. ஆனால் இஸ்லாத்தையும், மற்றும் பல விசயங்களையும் அவருடைய சொந்த விசயஙளுக்காக ஏன் இழுக்க வேண்டும் ?."

இந்த பிந்தைய திருமண விசயத்தை கோர்ட்க்கு வெளியே இப்போது செய்தது போல் முடிக்க வேண்டும் என்று சோயிப் நினைத்திருந்தால் சானியாவுடனான திருமணத்தை அறிவிப்பதற்க்கு முன்னாலேயே இதை செய்திருக்க வேண்டும்.எதற்க்காக இந்த புனிதமான இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு ஒரு கெட்ட் பெயர் ஏற்படுத்தி விட வேண்டும்?..

இஸ்லாமிய சட்ட படி , ஒருவர் திருமணம் செய்து கொள்ளப் போறவரை நேரில் பர்க்காமல் இருவருடைய அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொள்வதை தடுக்கிறது.

மேலும் இது வரை அமைதியாக இருந்து விட்டு இப்போது ஆயிஷா இந்த விசயத்தை கிளப்ப என்ன காரணம் ?. இது வரை அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ?.

ஆக மொத்ததில் இந்த அசிங்க நாடகத்தில் வந்த மூன்று பேருமே சுத்தமானவர்கள் அல்ல்.. இந்த நாடகத்தை ஒரு தொலை காட்சி தொடர் போல பார்த்து அடுத்து என்ன திருப்பு முனை நடக்குமோ என்று தொலை காட்சி முன் தவம் கிடக்கும் நாமும் தான்..

Friday, April 2, 2010

இன்றைய மெகா சீரியல் எங்கே போய் கொண்டு இருக்கிறது

முறைப்பாடு , பில்லி சூனியம் , மூட நம்பிக்கை , கலாசார சீர்கேடு, கள்ள காதல்கள், குடும்ப சதி , பொறாமை இவைகளின் கூட்டு கலவையாக இன்றைய மெகா சீரியல்கள் போய் கொண்டு இருகின்றன.

வீட்டின் வரவேற்பறையில் குடும்பத்துடன் பார்க்க கூடிய அளவில் எந்த TV நிகழ்ச்சிகளுமே இல்லையே என்று ஏங்கும் அளவிற்கு தான் இன்றைய டிவிக்கள் மற்றும் அதன் நிகழ்ச்சிகள் .

பொதுவாக எந்த சீரியலுமே பாக்காத குடும்பஸ்தர்கள் எப்படியோ அந்த கருமங்களை பார்க்க கூடிய சூழ்நிலைக்கு தள்ள படுகிறார்கள். உபயம் : மனைவி .மற்றும் குடும்பம் ..

அப்படி தான் நானும் , நீங்களும் அந்த கன்றாவி சீரியல்களை பார்க்க வேண்டி இருக்கிறது .. பகல் முழுதும் சீரியல் , அத்துடன் நிறுத்தி கொண்டாலும் பரவாய் இல்லை .. நாம் பார்க்கும் நிலைமை இருக்காது .. ஆனால் பொழுது சாய்ந்தும் தீராத அந்த சீரியல்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது ...

அப்படி தான் நான் மாட்டி கொண்டு , SUN டிவி யில் செல்லமே பார்க்கும் பொன்னான (?) வாய்ப்பு எனக்கு கிடைத்தது ...

அதில் முறைப்பாடு அப்படின்னு ஒன்னு வைக்கிறாங்க நம்ம செல்லம்மாவோட அண்ணன் பொண்டாட்டி (அவங்க தாங்க நம்ம பழைய அண்ணி )...ஒரு சேவல் கோழிய சிலை முன் இருக்கும் அந்த சூலாயிதத்தில் குத்தி வச்சுடாங்க .. அப்படி குத்தி வச்சிட்டா அந்த ரெண்டு குடும்பமும் பிரிஞ்சி அவங்களுக்குள்ளே எந்த ஒட்டு , உறவும் இருக்க கூடாது ... அப்படி இருந்துட்ட சாமி குத்தம் ஆகி , யாருக்காவது ஏதாவது ஆகிடுமாம் ..

அப்படி முறைப்பாடு பண்ணிட்டதால நம்ம செல்லம்மா சொந்த வீட்ட விட்டு பிரிஞ்சு கான்டீன் நடத்துறாங்க .. அவங்க அப்பா அவங்க வீட்டுக்கு வந்தப்போ , நெஞ்சி வலி எடுத்து வலியிலே துடிச்ச பிறகும் அவங்க வீட்டுல இருந்து தண்ணி கொடுக்காம , பக்கத்துக்கு வீடுலேயிருந்து தண்ணி வாங்கி கொடுத்தாங்க ..

அப்படி முறைப்பாடு ங்கிற மூட பழக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து போய் கொண்டு இருகிறது அந்த செல்லமே தொடர்..

அது அப்படி இருக்க , வீட்டின் வரவேற்பறையில் இருந்து சைடு டிஷ் , பெப்சி சகிதம் வச்சி தண்ணி அடிச்சி கொண்டு இருக்கிறாள் இன்னொருத்தி .. கேட்டால் ஆம்பழைங்க செய்றது எல்லாமே அவங்க செய்வாங்களாம் .. இந்த கொடுமைகளை எங்கே போய் சொல்லுவது ..

இந்த சீரியல்களை பார்க்கும் எந்த குடும்ப பெண்களும் , அவர்களை போல மூட நம்பிக்கைகளுக்கும் , அடுத்தவன் புருஷனை அபகரிக்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் , தனக்கு வேண்டாதவர்களை எப்படி எல்லாம் சதி திட்டம் தீட்டலாம் என்றும் tution எடுக்காத குறையாக எல்லாத்தையும் செய்முறை விளக்கங்களுடன் காட்டும் இந்த சீரியல்களுக்கு அடிமையாக மாற மாட்டார்கள் ன்னு என்ன நிச்சயம் ..

இந்த டிவி க்களுக்கும் சென்சர் கட்டுபாடு மிகவும் தேவை படிகிற ஒன்று ..


நாம் முதலில் செய்ய வேண்டியது இந்த மெகா தொடர் டிவி சானல்களை கட் பண்ணி விடுவதுதான் (குடும்ப தலைவன் என்கிற அதிகாரம் இருந்தால்)

இன்னைக்கி தான் கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன்

இன்னைக்கி தான் கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன் .. அது நால இன்னைக்கு கம்பெனி லீவு ...நாளைக்கு வாங்க ..

போங்கப்பு போய் புள்ளைங்கள படிக்க வையுங்க