Wednesday, August 11, 2010

இவர்களை யார் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக அங்கீகரித்தது?

முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் தி.மு.க. கூட்டணியில் இருக்கிற நிலையில், த.மு.மு.க.வின் ம.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் இழுத்துப் போட்டிருக்கிறார் ஜெயலலிதா.

இந்தச் சூழலில் த.மு.மு.க. தலைவரான பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் கேட்க பட்ட கேள்விகளும், பதிலும் மற்றும் அதற்க்கு பதிலுக்கு பதிலும்

கேள்வி:சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலங் கள் இருக்கிறது, அதற்குள் கூட்டணியை உறுதிப் படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்பது உங்களின் நிலைப்பாடு. ஆனா, சட்டென்று ஜெயலலிதாவை சந்தித்து, கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கிறீர் களே?

ஜவாஹிருல்லா:எங்களை சந்திக்க ஜெயலலிதா விரும்புகிறார் என்று செங்கோட்டையன் எங்களிடம் தகவல் தெரிவித் தார். இது குறித்து பலமுறை எங்களிடம் பேசவும் செய் தார் அவர். நாங்களும் மாநில நிர்வாகிகள் அடங்கிய உயர்நிலைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் விவாதித்தோம். இந்த கலந் தாலோசனையில் "தமிழக அரசியலில் தற்போது எந்த கூட்டணியிலும் நாங்கள் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பை நிராகரிப் பது அரசியல் நாகரிகம் கிடையாது. அதனால் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டு சந்திக்க லாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவை சந்தித்தோம். ஆக, கட்சியிட்ட கட்டளைப்படியே இந்த சந்திப்பு நடந்தது.

வாஸ்தவமான பேச்சு.. நல்ல நாகரீகம்.. எதிர் கட்சி தலைவர் அப்படிங்கிறதற்காக அவர் என்ன சொன்னாலும் செய்வீங்களா ? உங்களை முதலில் யார் அழைததாலும் போய் விடுவீர்களா? BJP, சிவசேனா முதலில் அழைதிருந்தால்? நீங்கள் சொல்லுவது போல் இது உங்கள் கட்சி இட்ட கட்டளையே தவிர முஸ்லிம் மக்கள் இட்ட கட்டளை அல்ல.

கேள்வி:ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து?

ஜவாஹிருல்லா:மிகவும் மரியாதையுடன் வரவேற்று உபசரித்த ஜெயலலிதா, "உங்களைச் சந்திச்சு நீண்ட காலமாச்சு' என்றார். ஆமாம்... எட்டு வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறோம் என்றேன். சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு என்ன மாதிரியான கோரிக்கைகள் இருக்கின்றன? என்று கேட்டார் ஜெயலலிதா. நாங்களும் தேசிய அளவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை விவரித்தோம். அதாவது, "இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்து ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் 2007-ல் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கை 2009-ல் நாடாளுமன்றத்திலும் வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்தக் கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு அக்கறை காட்டவில்லை. தேசிய அளவில் சிறுபான்மை யினருக்கு 15 சதவீதமும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு தரப்படுவது காலத் தின் கட்டாயம் என்று பரிந்துரைத்துள்ளார் ரங்கநாத் மிஸ்ரா. இவரின் பரிந்துரைகளை அமல்படுத்தப் போராடி வருகிறோம்' என்று விவரித்தோம். அத்துடன் எங்களின் இட ஒதுக்கீட்டிற்காக பாராளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றோம். இதனை ஏற்றுக்கொண்டார் ஜெயலலிதா. மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றார். அதற்கு நாங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

எட்டு வருசமாம் எட்டு வருசம்.. நீங்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன் நடத்திய சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கு பெற அந்த அம்மாவை அழைக்க சந்தித்ததை தானே சொல்லுறீங்க ? அந்த மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன். அந்த மாநாட்டில் ஜெ மன்னிப்பு கேட்டதும், அதற்க்கு பிறகு ஆட்சியில் வந்தவுடன் செய்த அட்டூழியங்கள் உங்களுக்கு மறந்து போச்சா?

இப்போ தான் சிறுபான்மையினருக்கு என்னென்ன கோரிக்கை இருக்குண்ணே கேட்டாங்களா ? இது வரை அவர் தமிழ் நாட்டில் வசிக்கவில்லையா?

ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு அக்கறை காட்டவில்லை என்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடைக்காதா என்று ஏங்கும் ஜேவிடம் முறை இடுவது நியாயமா அல்லது அவர் ஜே தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்து உங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையா ?


கேள்வி:கூட்டணியை உறுதிப்படுத்திக்கொண்டீர்கள்... சரி! கூட்டணியில் உங்களுக்கான இட ஒதுக்கீடு?

ஜவாஹிருல்லா:எத்தனை சீட்டுகள்? எந்தெந்த இடங் கள்? என்கிற பேர அரசியலை நாங்கள் விவாதிக்கவில்லை. அதுபற்றிய பேச்சும் அங்கு எழவில்லை. அ.தி.மு.க. கூட்டணிக்குள் நாங்கள் இருக்க வேண்டி விரும்பி, கூட்டணியில் நாங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதில் உடன்பாடு எங்களுக்கு இருந்ததால் மகிழ்ச்சியை தெரிவித்தோம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. இந்த தருணத்தில் இதை மட்டும்தான் சொல்ல முடியும்?

எப்படி பட்ட உடன்பாடு ? இதனால் முஸ்லிம் மக்களுக்கு எதாவது பலன் இருக்குமா ? அல்லது உடன்பாடு செய்ய சென்ற உங்களுக்கு மட்டும் தான் பலன் இருக்குமா ? இன்றளவும் மோடியுடன் தோழமை கொண்டுள்ள ஜெ அழைத்தவுடன் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து விட்டீர்களே , இது வரை நீங்கள் முஸ்லிம் சமுதாயத்துக்கு போராடினது எல்லாம் உங்களின் சுய நலனுக்காகவா? நீங்களும் ஒரு சராசரி அரசியல்வாதி என்று நிருபிச்சிட்டீங்களே.

கேள்வி:கூட்டணி உறுதின்னு நீங்கள்தான் சொல்கிறீர்கள். ஆனா, ஜெ.விடம் இருந்து அதுபற்றியான உறுதி எதுவும் வெளியாக வில்லையே? அதனால் தேர்தல் நேரத்தில் குறைந்த சீட்டுகளை ஒதுக்கி உங்களை ஏற்க வைப்பார், இல்லையெனில் கூட்டணியிலிருந்து கழட்டி விட்டுவிடுவார் என்கிற பேச்சு எதிரொலிக்கிறதே?

ஜவாஹிருல்லா:முஸ்லிம் சமூகத்தை ஜெயலலிதா ஏமாற்றமாட்டார்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணிக்குள் நாங்கள் இருக்க வேண்டுமென்பதால்தான் கார்டனுக்கு அழைத்துப் பேசுகிறார். இதுவே கூட்டணிக்கான உறுதிதான். எங்களின் உணர்வுகளுக்கும் உரிமை களுக்கும் கௌரவத்தை தரக்கூடிய அளவில் கூட்டணி அமையும். அதில் சந்தேகமில்லை.

ஜெயலலிதா ஏமாற்றமாட்டார்ங்கிற நம்பிக்கை இருக்கிறதென்று எதை வச்சு சொல்லுறீங்க? உங்களூக்கும், முஸ்லிம் சமுதாயத்துக்கும் ஏதாவது இந்த அம்மா செஞ்சிருக்கா அல்லது இது வரை சொன்ன வாக்குறுதியை தான் நிறைவேற்றியிருக்கா?. எப்படியாவது முஸ்லிம் ஓட்டுகளை வாங்கி மறுபடியும் ஊழல் ஆட்சி செய்ய அந்த அம்மா செய்யும் தந்திரம் இது என்பது கூடா உங்களுக்கு தெரியாதா அல்லது இப்போதே அடிப்பதில் எத்தனை சதவீதம் என்பதில் உங்களுக்கும் , அம்மாவுக்குமிடையே நீங்க்ள் மேலே சொன்ன அதே உடன்பாடா?
மக்களை நம்பாமல், மக்களுக்கு நல்லது செய்து பழக்கமில்லாமல் , யாகம் மட்டுமே செய்து ஆட்சிக்கு வர நினைக்கும் மந்திரவாதியுடன் கூட்டணி வைக்க உங்களுக்கு வெட்கம் இல்லையா?


கேள்வி:நரேந்திர மோடி ஆசிர்வாதத்தில் நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் கொல்லப்பட்டன. அந்த நரேந்திர மோடியை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து 45 வகையான பதார்த்தங்களை வைத்து விருந்து தந்தவர் ஜெயலலிதா. அந்த போயஸ் கார்டனில் நீங்களா? மோடி தோழியுடன் கூட்டணியா? என்று முஸ்லிம் அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றனவே?

ஜவாஹிருல்லா:குஜராத் கலவரம் 2002 பிப்ரவரியில் நடந்தது. அப்போது மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. இந்த கூட்டணியில் இருந்தவர் கலைஞர். பா.ஜ.க.வுடன் 1999-ல் தேர்தல் கூட்டணியை கலைஞர் வைத்தபோது மதவாத பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்று விமர்சனம் எழுந்தது. அதுபற்றி கவலைப்படாத கலைஞர், "அனலைத் தணிக்கும் தண்ணீராக பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் இருப்போம்' என்றார். ஆனால் குஜராத்தே பற்றியெரிந்த போது அதனைத் தடுக்க எந்த நடவடிக்கை யிலும் ஈடுபடவே இல்லை. நரேந்திர மோடியின் செயல் என்பது பா.ஜ.க.வின் செயல் திட்டம். அதனால் மோடியை மட்டும் தனியாகப் பிரித் துப் பார்க்கக் கூடாது. ஆக, அந்த வகையில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுமே கூட்டணி உறவு வைத்திருக்கிறது. இந்த உறவில் இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடில்லை. அதனால் அரசியலை அரசியலாகவே அணுக வேண்டும்.

மோடியையும். BJP யையும் பிரித்து பார்க்க கூடாது என்றால், நீங்கள் BJP க்கு எதிராக போராடாமல், மோடி என்ற தனி மனிதனை எதிர்த்து போராடியது ஏன்? உங்களுக்கு தேவை என்றால் , மோடியையும் , BJP யையும் சேர்ப்பதும், இல்லைஎன்றால் பிரித்து பார்ப்பதும் சரியா ? கலைஞரும் ,ஜெயும் BJP யுடன் கூட்டணி வைத்திருந்தாலும் , கலைஞர் மோடியை ஆதரிக்கவோ , அவருக்கு விருந்து படைக்கவோ இல்லை. ஜெ செய்தது போல முஸ்லிம் விரோத அரசும் கலைஞர் நடத்தவில்லை.

அரசியலை அரசியலாக அணுக வேண்டும் என்பது சரி தான்.. அதே சாக்கடையில் நீங்களும் வீழ்ந்து உங்களை தரம் தாழ்த்தி கொள்ள வேண்டுமா ? இந்த கேடு கெட்ட அரசியலை செய்ய ஏற்கனவே நிறைய கட்சிகள் இருக்கும்போது நீங்களும் அதை செய்யலாமா ? வன்னியருக்கு ஒரு ராமதாஸ் போல , முஸ்லிம்களுக்கு ஒரு ராமதாஸ் தேவையா ? முஸ்லிம் மக்களுக்கு தேவை என்னவென்றால் இஸலாத்தை பாதுகாக்க, அதை பரப்ப் ஒரு சமுதாய இயக்கமே அன்றி , அடுத்தவன் செய்யிறான் அப்படிங்கிறதுக்காக் அதே சாக்கடை தேவை இல்லை.. அதற்க்கு இங்கு ஏற்கனவே ஆட்கள் வரிசையில் நிற்க்கிறார்கள்..

இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லைண்ணு நீங்களே சொல்லும் போது, எதோ கொஞ்சமாவது நல்லது செய்த கலைஞரிடம் கூட்டணி வைக்காமல், நல்ல்து செய்தே பழக்கமில்லாத ஜெயிடம் கூட்டணி வைத்தது ஏன்?



கேள்வி:தமிழகத்தில் முஸ்லிம்களின் முக்கிய கோரிக்கையான இட ஒதுக்கீட்டை வழங்கி யிருப்பது தி.மு.க.தான். இதற்காக, முஸ்லிம் சமூகமே கலைஞருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க.வுடனான உங்கள் நிலைப்பாடு முரண்பாடாக தெரிய வில்லையா?

ஜவாஹிருல்லா:முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர தி.மு.க. கடமைப்பட்டிருக்கிறது. காரணம் இதற்காகத்தான் 1967-லிருந்து தி.மு.க. வை கண்மூடித்தனமாக ஆதரித்து வந்தது முஸ்லிம் சமூகம்.

கண்மூடி தனமாக ஆதரித்து அதற்க்கு பலனும் கிடைத்த பிறகு , திடீரென்று ஜெயிடம் கூட்டணி வைக்க என்ன காரணம்? அப்படி அவர் உங்களுக்கு என்ன வாக்குறுதியை தந்து விட்டார்? இனியும் முஸ்லிம் சமுதாயம் கலைஞரை ஆதரிக்காது என்று உங்களுக்கு யார் சாசனம் எழுதி தந்தது? நான் ஒன்றும் தி.மு.க காரன் அல்ல , ஆனால் ஜெயை விட கலைஞர் தான் இனியும் எதாவது செய்வாரென்ற நம்பிக்கை இருக்கு.

கேள்வி:முஸ்லிம்களுக்கு பாதுகாவலராக எப்போதும் இருப்பது தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிதான். இந்த உணர்வுதான் த.மு.மு.க. தொண்டர்களிடம் இருக்கிறது. ஆனா, இதற்கு மாறாக கூட்டணி உறவு கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறதே?

ஜவாஹிருல்லா:த.மு.மு.க. தொண்டர்களிடம் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லவே இல்லை. எங்களின் எதிரிகள் யாரேனும் இப்படி கிளப்பிவிட்டிருப்பார்கள்

தொண்டர்களிடம் இப்படி பட்ட உணர்வு இல்லைன்னு நீங்க எப்படி உறுதியாய் சொல்ல முடியும் ? நீங்கள் கூட்டணி வைப்பதர்க்கு முன் எத்தனை தொண்டர்களை சந்தித்து அவர்களின் மன நிலையை அறிந்தீர்கள்? ஆனால் ஒன்று மற்றும் நிச்சயம் , நீங்கள் ஒன்றும் தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதிகள் அல்ல்.. நீங்கள் இப்படி இரண்டு பட்டு கிடப்பதால் அதன் பாதிப்பு மட்டும் என்னவோ முஸ்லிம் சமுதாயத்திற்க்கு மட்டும் என்பது நிச்சய்ம்.