Friday, April 8, 2011

வைகோவிற்கு ஏன் இந்த நிலைமை ?

மார்ச் மாதம் சுனாமி ஜப்பானை புரட்டி போட்ட நேரம், அதே  நேரம் தான் ஜெயலலிதாவின் 160 வேட்பாளர் பட்டியல் சுனாமியும் கூட்டணி கட்சியினரையும் புரட்டி போட்டது.. விஜயகாந்த், தா பாண்டியன், கிருஷ்ணசாமி , ராமகிருஷ்ணன் மற்றும் பலர் தமது கூட்டணி தலைமை இப்படி ஏமாற்றி விட்டதே என்று தே மு தி க அலுவலகத்தில் கூடி அடுத்து என்ன செய்வது என்று கையை பிசைந்த நேரம், விஜயகாந்த்  கோபத்தால் பண்ருட்டியை நல்ல நல்ல வார்த்தைகளால் அர்ச்ச்சனை செய்ததை தடுத்ததால் மச்சான் சுதீஷும் அடி வாங்கிய நேரம் , கிட்டதட்ட என்ன இறுதியாகவே வைகோவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்ட நேரம்..

 கருணாநிதியால் காங்கிரஸுடன் உடன்பாடு காண முடியாததால் கட்சி எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பி ராஜினாமா பண்ண சொல்லி அனுப்பி  அடுத்த என்ன நடக்குமோ என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்த நேரம்.. இப்படி ஆளாளுக்கு அவங்களோட காரியத்துலேயே கண்ணாக இருந்த நேரம்..

ஜப்பானின் புக்குஷிமா மகாணத்தை பூகம்பமும், அதை தொடர்ந்து சுனாமியும் தாக்கியதில் பலத்த சேதம் அடைந்த அணு உலைகள் வெடிக்கும் ஆபத்தில் ஜப்பான் மக்கள் அனைவருமே பயத்தில் உச்சத்தில் உறைந்த நேரம் வைகோ வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி இதோ :


தொடர் பூகம்பம், எரிமலைச் சீற்றம், ஆழிப் பேரலை என இயற்கை சீற்றமும், அதனைத் தொடர்ந்து அணுஉலை வெடித்துச் சிதறி செயற்கைப் பேராபத்தும் ஜப்பானை முற்றுகை இட்டன. பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். லட்சக்கணக்கானோர், உயிர்களையும், உடமைகளையும் இழந்து, வெட்ட வெளியில் கடும் குளிரில் வாடி வதங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

நவீன விஞ்ஞான உலகில் எட்டிப் பிடிக்க முடியாத சிகரத்தில் இருந்த ஜப்பானுக்கே இந்த நிலை என்றால், இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு என்ன? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனெனில், இந்தியாவும் சுனாமித் தாக்குதலுக்கு உள்ளாகி, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து இருக்கிறது. எதிர்காலத்திலும், அத்தகைய ஆபத்து நிலவுகிறது.

எனவே, இந்தியாவில் உள்ள 20 அணு உலைகள் தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணு உலைககளின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான அணு உலைகள் என்றால், அவ்வப்போது அணு உலை நிர்வாகமும், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை உயர் அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், அபாயச்சங்கு ஒலிக்கச் செய்து மக்கள் பொதுமக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி ஓடித் தப்பிக்க பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி அளிப்பதன் மர்மம் என்ன?


ஜெயலலிதா தன்னை கூட்டணியில் இருந்து விரட்டி அடித்த அதே நேரம் வைகோ தன் கட்சியையோ , தன்னையோ பற்றி கவலை கொள்ளாமல் இந்தியாவின் அணு உலைகள் பாதுகாப்பானது தானா என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.. ஆனால் தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து கட்சிகளும் தி.மு.க , அ.தி.மு.க உட்பட அவரவர் கூட்டணியையும், சீட்டுகளையும் மட்டுமே சிந்தித்தார்களே தவிர இப்படி பட்ட பேராபத்து தமிழகத்துக்கு வந்தால் என்ன செய்வது பற்றி கவலைப்படவே இல்லை.

இதே போல தான் மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வைக்க தனி ஒரு மனிதனாக போராடியிருக்கிறார்.. இவர் இந்த ஆலையை மூட வைக்க காரணமாக இருந்ததால் தான் ஆதிக்க பண முதலைகளின் தூண்டுதலால் ஜெயலலிதாவால் வெளியே தள்ளப்பட்டிருக்கிறார் என்ற செய்தியையும் மறுத்து விட முடியாது.

எல்லா அரசியல்வாதியும் பொய்களையும், புரட்டுகளையும் சொல்லி, அடுத்தவர்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தும், மற்றும் பல டகால்ல்டி வேலைகளையும்  செய்தும் ஓட்டு வேட்டையாடி கொண்டிருக்கும் சமயம், வைகோ சத்தமே இல்லாமல் நீரி நிறுவனத்துடன் சேர்ந்து  சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் கழிவுகள் குறித்து ஆய்வு செய்ய  நீரி நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் வைகோவும் சேர்ந்து ஸ்டெர்லைட்  ஆலைக்கு சென்றிருக்கிறார்.

இப்படி மக்களுக்காக ஏதாவது செய்யணும்னு நினைக்கிற வைகோ போன்றவர்களால் அரசியலில் ஏன் வெற்றி பெற முடியவில்லை. சினிமாவில் நடிக்கும் கழைக்கூத்தாடிகளையும், கொலை , கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளையும் நம்பும் தமிழ்நாட்டு மக்கள் ஏன் நேர்மையான அரசியல்வாதிகளை கண்டு கொள்வதில்லை? படத்தில் பஞ்சு டயலாக் பேசி ஹீரோவாக நடித்தாலே போதும் , அவருக்கு நாட்டை ஆளும் திறமை இருக்கிறது என்று அவர் பின்னால் போகும் கூட்டங்கள் ஏன் வைகோ போன்றவர்களை நம்புவதில்லை? இந்த விசயத்தில் தமிழன் அண்டை மாநிலமான கேரளாவை பார்த்து கற்று கொள்ள வேண்டியது ஏராளம்.. அங்கெல்லாம் மகா மெகா ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லாலால் ஒரு வார்ட் கவுன்சிலர் கூட ஆக முடியாது..அந்த மக்கள் அரசியலையும், சினிமா மாயையையும் எப்போதுமே ஒன்றாக கலப்பதில்லை.. என்ன செய்வது இந்த எம்.ஜி.ஆர் , என்.டி.ஆர்.. கே.கே ,ஜெ ஜெ போன்ற வியாதிகள் மக்களை பாதி நூற்றாண்டாகவே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. அந்த தொற்று நோய் இப்போது விஜயகாந்த், சரத் குமார், கார்த்திக், ராஜேந்தர் போன்ற புதிய நோய் கிருமிகளாக உருவெடுத்து ஆளாளுக்கு தமிழகத்தை தான் தான் சுமப்பேன் என்று போட்டி போட்டு கூவிக்கொண்டிருக்கிறாரகள்..

சற்று ஓய்வு நேரம் கிடைத்தால் மேடையில் யாரையாவது அழைத்து வைத்து தன் புகழை பாட வைத்து கேட்டு ரசித்தும், சினிமாவுக்கு கதை வசனம் எழுதியோ, சினிமாவை வெளியிட்டோ நேரத்தை வீணடிக்கும் கலைஞருக்கு மத்தியில், ஓய்வெடுத்து ஓய்வெடுத்தே களைத்து போனதால் திரும்பவும் ஓய்வெடுக்க கொடநாடு செல்லும் ஜெயலலிதாவுக்கு மத்தியில், சூட்டிங் இல்லைன்னா பண்ருட்டி எழுதி கொடுத்து அதை வாசித்ததோடு தன் கடமை முடிந்து விட்டதாகக் கருதி கொண்டு குவாட்டர் அடித்து விட்டு குப்புற படுத்து காலம் தள்ளும் விஜயகாந்த் மத்தியில் வைகோ எனும் ஒரு அரசியல்வாதி சற்று உயர்ந்தே நிற்க்கிறார்.. என்ன செய்வது அவருக்கு பிழைக்க தெரியவில்லை..