Wednesday, January 5, 2011

இலவசங்களும், சில விசயங்களும்

யார் யாரோ forward பண்ணி எனக்கும் வந்த இ-மெயில்..

====================================================================
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான  மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.  விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா  வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.  இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே. கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார். அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார்
 
====================================================================

இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை. இந்த செய்தி உண்மையோ , இல்லையோ ஆனால் சற்று சிந்திக்க கூடிய விசயம் இது.
 
இலவசங்களும், மானிய விலை குறைப்புகளும், இட ஒதுக்கீடுகளும் இல்லாமல் , தொலை நோக்கு பார்வையுடன் கூடிய சிறந்த திட்டங்களை மட்டுமே நிறைவேற்றி ஒரு அரசால் மக்களிடம் நன்மதிப்பையும் பெற்று , அடுத்த முறையும் ஆட்சிக்கு வர முடியும் என்ற ஒரு நம்பிக்கையை ஒரு கட்சியால் பெற முடியுமா? முடியாது என்பதே என் வாதம். காரணம், பெரும்பான்மையான் மக்களும் (நான் உட்பட) அவசர உலகத்தில் வாழ கூடிய அவசரபுத்திக்காரர்கள்.மரண செய்தியை கூட ,நேரில் போய் சொன்ன காலம் போயி, பேஸ்புக்கில் தெரிவிக்கும் நவீன , அதி வேக விஞ்ஞான யுகமிது.


ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை வாடி நிற்க்க இங்கே யாரும் கொக்குகள் இல்லை. எதையுமே அன்றே கிடைத்தால்தான், அதுவும் அப்போதே கிடைத்தால் நலம் என்று தான் பெரும்பாலானோரும் நினைக்கிறோம்.இந்த மக்களின் நாடி துடிப்பை அறிந்து வைத்து கொண்டு தான் நமது ஆட்சியாளர்கள் ஓடுமீன்களை தூண்டில்களில் கட்டி நம் முன்னே வீசுகிறர்கள்.
நல்ல திட்டங்களை தீட்டினால் அதற்கான் பலன் உடனே கிடைத்து விடும் என்று கூற முடியாது..சாலை, மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் உள்கட்டமைப்பு போன்றவைகளுக்கான திட்டங்களை தீட்டினால் அதற்கான பலன் கிடைக்க மாதங்கள், வருடங்கள் ஆகலாம், ஆனால் அது வரை பொறுத்திருக்க நமக்கு பொறுமையும் இல்லை , திட்டங்களை கொண்டு வந்ததற்காக அவர்களுக்கு நாம் திரும்ப ஓட்டு போடுவதும் இல்லை. இதனால் தால் இவர்கள் இலவசங்களை அவ்வப்போது அள்ளி கொடுக்கிறார்கள்.கடந்த முறை ஆட்சி செய்த கலைஞர் , இப்போது உள்ளது போல் இலவசங்களை அள்ளி கொடுக்காமல் ஓரளவுக்கு நன்றாகவே நல்ல திட்டங்களை கொண்டு வந்து ஆட்சி செய்திருந்தாலும், அவரால் அடுத்த முறை வர முடியவில்லை. அதன் பிறகு ஜெயலலிதா வந்து செய்த கொடுமைகள் வேறு.
கலைஞருக்கு இலவசங்களை கொடுத்து , மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க திட்டம் என்று ஜெ அம்மையார் புலம்பினாலும் , இந்த இலவசங்களை கொடுத்து பழக்கியதே இவருடைய புரட்சி தலைவர் எம்.ஜி.யார் தான்.. அவர் தான் மக்களை ஓட்டுக்காக வெறும் சோறு மட்டும் போட்டு வேறு எந்த நல்ல திட்டங்களும் இல்லாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் தமிழகம் எந்த துறையிலும் முன்னேற வில்லை என்பதே நிதர்சன உண்மை. காமராசர், பிள்ளைகள் பள்ளிக்கு பசியோடு வருவதால் , மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.ஆனால் அவருடைய ஆட்சி காலத்தில் தான் அதிகமாக பள்ளிகூடங்களும் , அணைகளும், தொழிற்சாலைகளும் கட்டபட்டது. 
அம்மையாரிடம் ஏழைகளை பணக்காரர்களாக்க கைவசம் ஏதாவது திட்டம் இருக்கா ? இப்போது தமிழக மின் பற்றாக்குறைக்கு காரணமே , அம்மா ஆட்சியில் மின் தேவைக்க்கு  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது தான் காரணம்னு சொல்லுறங்க.

இலவசமாக  என்ன கிடைத்தாலும் அதை வாங்க வரிசையில் நிற்க்கும் ஆட்கள் இருக்கும் வரை இந்த இலவசங்கள் தொடரலாம்.வீட்டில் ஒண்ணுக்கு ரெண்டு டீவி வைத்திருந்தவர்களும், சொல்ல போனால் latest LCD  டீவி வைத்திருந்தவர்கள் கூட வரிசையில் நின்று டீவி வாங்கி கொண்டு போய் அதை எங்கே வைப்பது என்று தெரியாமல் முழித்த  கதைகளும் உண்டு. 

இதோ ஒரு தமிழ் குடிமகனின் பேச்சு..

""என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!' "என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம்"

இலவசங்களை அரசாங்கம் கொடுப்பது தவறு என்று சொன்னாலும், அந்த இலவசங்களை மட்டுமே நம்பி, உழைப்பை நம்பாமல் சோம்பேறியாக வீட்டில் இருப்பதும் குற்றமே.



இந்த இலவசங்களும், மானிய விலை குறைப்புகளும் அறவே கூடாது என்று யாரலும் ஆணித்தரமாக கூற முடியாது. ஒருவன் விபத்தில் அடி பட்டு கொண்டால் என்றால் அவனுக்கு தேவையான் முதலுதவிகளை செய்த பிறகே அவனுக்குரிய சிகிச்சைகளை செய்ய வேண்டும்.. இங்கே முதலில் கொடுப்பது முதலுதவி, அப்புறம் தகுந்த சிகிச்சை என்பது அவனை பரிபூரணமாக குணபடுத்தக் கொடுக்கும் தொலைநோக்கு பார்வை. அது போல தான் சாப்பாடே இல்லாமல் கஷ்ட படுகிறவனுக்கு முதலில் கிடைக்க வேண்டியது சாப்பாடு எங்கிற முதலுதவி தானே தவிர அவனை நேராக அறுவை சிகிட்சைக்கு கூட்டி போவது சரி இல்லை. பசித்தவன் வந்தால் , அவனுக்கு மீன் கொடுக்காமல் அவனை கூட்டி போய் மீன் பிடிக்க தான் கற்று கொடுக்க வேண்டும் என்பது வெறும் வாதம் மட்டுமின்றி அவனும் வர மாட்டான்.மானிய விலையில் கிடைக்கும் அரிசியை கடத்தல்காரர்களால் அண்டை மாநிலங்களுக்கு கடத்த படுகிறது என்ற காராணத்திற்காக அந்த திட்டத்தை நிறுத்தினால் , எலி கொடுமை தாங்க முடியாமல் வீட்டை கொளுத்தியதற்க்கு சமம்.
நமது அண்டை மாநிலங்களை போல தமிழகத்தில் பட்டிணி சாவு இல்லங்கிற நிலைமைக்கு காரணம் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ஒரு காரணமில்லைன்னு யாராலும் சொல்ல முடியாது.ஆனால் மற்ற சாதனங்களின் விலை விண்ணை முட்டுவதையும் மறைக்க முடியாது.சாலை, மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் உள்கட்டமைப்பு,வேலை வாய்ப்பு போன்ற திட்டங்களை தீட்டாமல் வெறும் இலவசங்களும், மானியங்களும் கொடுப்பது , அடிபட்டவனுக்கு தகுந்த சிகிட்சைகளை செய்யாமல் , வெறும் முதலுதவியுடன்  நிறுத்தி கொள்வதர்க்கு சமம், இங்கு தேவை , முதலுதவி அதற்க்கு பின்னால் தகுந்த சிகிட்சை. 

ஆட்சியில் இருப்பவர்கள் அதை தக்க வைக்க கொடுப்பது இந்த இலவசம், எதிர்கட்சி காரர்களை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதும் இந்த இலவசமே.
"SURVIVAL OF THE FITTEST"




 

3 comments:

Soundararajan G said...

Mr. Pandi,
This is one of the best posts in your blog. Keep it up! the sky is the limit.
//அடிபட்டவனுக்கு தகுந்த சிகிட்சைகளை செய்யாமல் , வெறும் முதலுதவியுடன் நிறுத்தி கொள்வதர்க்கு சமம்// - this summarises what is happening in TN for the last 30 years; no change whoever rules. The irony is there is no alternate for this :-(. I mean only the person change, but the approach is same.

Unknown said...

உருப்படியா ஒரு விஷயம் சொல்லிருக்க நண்பா!
இவிங்க எப்போவுமே இப்படிதான் பாஸ்! அடிச்சிட்டே இருப்பாய்ங்க! அடிங்க பாசு அடிங்க...!!

Sathik Ali said...

நன்றாக எழுதுகிறிர்கள்.உண்மையான எழுத்து.ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தப்பில்லை. கூகிள் இலவச இடம் தருவதால் தான் நல்ல பதிவுகளை எழுத முடிகிறது. படிப்பறிவில்லா கிராம மக்களுக்கு உலகம் தெரியவப்பதில் டிவிக்கள் பங்கு அதிகம் . அதே வேளை செயற்கை கோள் வழி தரமான கல்வியயும் டிவி மூலம் வழ்ங்கினால் பயன் இன்னும் கூடும்.கலைஞர் தொலை நோக்காகவே இத்திட்டத்தை கொண்டு வந்திருப்பார்.