Wednesday, January 26, 2011

காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரை கடிதம்!


இயக்குனர் சீமான் அவர்களுக்கு,
வணக்கம். இனியவளே படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.

பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்!

திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கி ‘நாம் தமிழர்’ கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.

ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி!

என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் ‘நம்பிக்கை நாயக’னாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.

ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்… என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளை – நான் உட்பட  உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் அ.தி.மு.கவையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.

நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி?

யார் இந்த ஜெயலலிதா?

‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடைய ‘உண்மையான உள்ள வெளிப்பாடு’!
தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்ரன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர், வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ்சிறையில் அடைத்தவர், இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்றுவரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர், இன்றளவும் ராஜபட்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர், அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக ‘தமிழீழம் அமைத்துத் தருவேன்’ என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர் ‘சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தை’ நம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர் – இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது?

உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?

உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானிய ‘இராணுவ’த்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்?

தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெற்ரோலை வீசலாமா?

கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெயின் இனத்துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா?

‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்’ என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது ‘இனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்’ என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?..

கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளது – ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர?

ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா?

‘அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர?

ஐந்தாண்டு கழித்து (ஜெயின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!

தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, ‘தலைசுற்றிப்’ போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்… அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்.
விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் மக்களை ஏமாற்றிவிட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்!

காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தௌ;ளிய, நேரிய நோக்கமான ‘தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடு’ ஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே?
உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால் ‘திராவிட தேசியத்தின்’ தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது. திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும் ‘இந்திய தேசியத்’தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன. பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்துவிட்டது. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை.

தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களே… உங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை!

சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை  சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.

அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?

நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.

இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.

மற்றத் தொகுதிகளில் ‘திமுக வும் அதிமுக வும் ஒன்றே’ என்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 ஓ’ வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.

இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!

இதையெல்லாம் செய்தபின் பகலவனுக்காகவும் நேரம் ஒதுக்கினால், நல்லது.. சொல்லியனுப்புங்கள், நானும் வந்து பாடல் எழுதுகிறேன்.

திரை அதிர, தமிழனின் சிறை உடைப்போம்!
என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு

உங்கள்
தாமரை
20.01.2011
சென்னை 2

 
 

1 comment:

Soundararajan G said...

Leaving DMK and ADMK aside, We must focus on the common agenda: i.e. defeating congress in all format.
1. make sure that Congress loose majority in the forthcoming elections in any format
2. do not participate in any election rally conducted by congress partymen.

3. do not buy/read any magazine that supports Congress.

With these, we will send a strong message to those sitting in Delhi that TN people are united and against the foreign policy that so called Central government has towards Srilanka or any neighbors for that matter.

NAALAI NAMADHE!