Tuesday, March 1, 2011

கூட்டணி ஆட்சி : காங்கிரஸ் தரும் நிர்பந்தம்! -சோலை!

தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. நல்ல முடிவு ஏற்படுமா?

ஆனால் இல்லாத ஊருக்கு காங்கிரஸ் கட்சி சக்கரமில்லாத வண்டியில் பயணம் செய்வதாகவே தோன்றுகிறது. சத்தியமூர்த்தி பவனைத் தேடி தி.மு.கழகம் வந்தால் நிபந்தனைகள் விதிக்கலாம். ஆனால் அறிவாலயத்தைத் தேடிப்போய்விட்டு வானத்து நிலவில் குடியேற வழி சொல் என்பன போன்ற நிபந்தனைகளை விதிப்பதாகச் செய்திகள் வருகின்றன.

தேர்தலுக்கு முன்னரே கூட்டணி ஆட்சி என்று அறிவிக்க வேண்டும்.

கூட்டணி ஒரு குறைந்தபட்சத் திட்டத்தை வகுக்க வேண்டும். அந்தத் திட்டம் செயல்படு வதைக் கண்காணிக்க ஓர் ஒருங் கிணைப்புக்குழு வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு முன்னர் 90  தொகுதிகளைக் கேட்கும் காங்கிரஸ் கட்சியின்  வலிமை என்ன என்பதனைப் பார்க்க வேண்டும். சோனியா பங்குகொண்ட திருச்சி பேரணிக்குத் திருநாவுக்கரசர் திரட்டிய கூட்டத்தையும், மாவட்ட அமைச்சர் திரட்டி அனுப்பிய கூட்டத்தையும் கோடிட்டுக் காட்டி காங்கிரஸ் கட்சியின் பலத்தைப் பாரீர் என்று பறைசாற்றினர்.

அந்தப் பேரணிக்குத் தொண்டர்களைத் திரட்ட மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மாவட்டம் தோறும் பயணம் செய்தார்.  ஊழியர்கள் கூட்டங்களை அவர் எப்படிச் சமாளித்தார் என்பதனை  ஏடுகளில் பார்த்தோம். ஆனால் எல்லாக் கூட்டங்களிலுமே தி.மு.க. உறவு வேண்டாம் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அண்மையில் ராகுல் காந்தி கலந்துகொண்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களிலும் தி.மு.க. உறவு  வேண்டாம் என்று திட்டமிட்டுத் தெரி விக்கப்பட்டன.  இதே கருத்தை மாநில காங்கிரஸ்  கட்சியின் குழு தலைவர்கள் சிலர் கடந்த பல ஆண்டுகளாகவே விதைத்து வந்தனர். இதன்  விளைவுகளை தி.மு.கழகம் காலத்தோடு கணித்திருக்க வேண்டும்.

யார் என்ன சொன்னாலும் சோனியா என்ற சுப்ரீம் கோர்ட்டில் முறையிடலாம் என்று கருதியது.

இப்போது அவர்கள் அடுத்த  எல்லை யைத் தொட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தாய் காங்கிரஸ்  எட்டடி வேகத்தில் பாய்ந்தால்  இளைஞர் காங்கிரஸ் பதினாறு அடி வேகத்தில் பாய்வதாக சோனியாவையே நம்ப வைத்திருக்கிறார்கள். ஆம்... தினம் தினம் ஆயிரமாயிரம் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவதாகவும் தற்போது அந்த காங்கிரஸ் கரை காண முடியாத  அளவிற்கு  கடல்போல் பெருகி வளர்ந்து இமயத்தின் முகட்டை எட்டிப் பிடித்திருப்பதாகவும் கூறியிருக் கின்றார்கள். நல்ல வர்ணனைதான். 

தற்போது உறுப்பினர்களாகப் பதிவு செய்த இளைஞர் காங்கிரஸ் கட்சியினருக்கு கட்சி அடையாள அட்டைகள் டெல்லியிலிருந்து அனுப்பப்படுகின்றன.  கள்ளக்குறிச்சியில் தி.மு.க., ம.தி.மு.க., அ.தி.மு.க.காரர்களுக்கெல்லாம் அத்தகைய கார்டுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. தமிழகம் முழுமையும் இதே நிலைதான்.

தமிழகத்தில் முதியோர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 லட்சமாம். இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 லட்சமாம். இப்படி டெல்லியில் போய் சொல் கிறார்கள். அதனையும் அவர்கள் நம்புகிறார்கள். மத்திய உளவுத்துறை அவர்களிடம்தானே இருக்கிறது. உண்மை என்னவென்று அவர்கள் அறிய முடியாதா? அதேபோல் இன்னொரு பக்கம் மாணவர் காங்கிரஸ் மளமளவென்று வளர்ந்திருப்பதாகவும் சொல்லி வைத்திருக் கிறார்கள்.

எனவே தி.மு.க.விடம் 90 இடங்களைப் பெறவேண்டும் என்றும் தேர்தலுக்கு முன்னரே கூட்டணி ஆட்சி பற்றி அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். சகித்துக் கொள்ள முடியாத நிபந்தனைகளையெல்லாம் தி.மு.கழகம் இன்றைய சூழ்நிலையில்  ஏற்கும் என்று கருதுபவர்கள் ஏமாந்து போவார்கள். அறிவாலயத்தின் அடக்கத்தை சோதித்துப் பார்க்கிறார்கள்.

ஒருமாத காலத்திற்கு முன்னர் அவர்கள் மூன்றாவது அணி அமைக்க முயன்றனர். தே.மு.தி.க.வின் இளையதலைவரை டெல்லிக்கு அழைத்து அகமதுபடேலுடன் ஆலோசனை நடத்தினர்.  பா.ம.க.விற்கு அவர்கள் வலை விரித்தபோதுதான் தி.மு.கழகம் விழித்துக் கொண்டது.  விடுதலைச் சிறுத்தைகளுக்குத் தூண்டில் போட்டனர். "காங்கிரஸ் உறவை தி.மு.கழகமே கத்தரித்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். அப்படியிருக்க உங்களோடு  எப்படி ஒரு அணி காண முடியும்' என்று சிறுத்தை சீறியது.

அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? "இரண்டொரு நாட்களில் கலைஞர் டி.வி. அலுவலகத்தில் ரெய்டு நடைபெறும். அதன் பின்னர் இருவர் விசாரிக்கப்படுவர். இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் உறவை கலைஞரே கத்தரித்துக்கொள்வார்' என்று  சொன்னார்கள்.

ஆனால் அந்த வாதத்தை  எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கட்சிகள் தி.மு.க. அணியில் இருக்கும், இல்லையேல் அ.தி.மு.க. அணியில் இருக்கும். அதனை விடுத்து ஏகாந்த நிலையில் இருக்கும் எந்தக் கட்சி அணி அமைத்தாலும் அதில் இணையமாட்டார்கள்.

ஆனால் கூட்டணி ஆட்சி என்று இந்த முறை யாவது  பிள்ளைகளை அமைச்சர்களாகப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். மத்தியில்  மன்மோகன்சிங் அரசில் தி.மு.கழகம் அங்கம் பெற்றிருக்கிறது. அதேபோல் தி.மு.க. ஆட்சியிலும் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்பது அவர்களது வாதம்.  2004-ம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த கூட்டணி அரசிற்கும் இப்போது தொடரும் அதே கூட்டணி அரசிற்கும் தி.மு.கழகம்தான் அச்சாணி.

2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் டெல்லி, தமிழக அரசின் இல்லத்தில் தங்கியிருந்த  கலைஞரை சோனியாவே வந்து சந்தித்தார். ஆனால் 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலம் சற்று கூடியதால் சோனியாவை சந்திக்க கலைஞர் செல்ல வேண்டியிருந்தது. இது தான் காங்கிரஸ் கட்சி யின் கலாச்சாரம்.

2004-ம் ஆண்டு அமைந்த மன்மோகன்சிங் அமைச்சரவையில் சிதம்பரம் நிதியமைச்சராக  இருந்தார். அவர் நெய் வேலியையும் சேலத்தையும் ஏலம்போட்டார். அதனைத் தடுத்து நிறுத்தியது தி.மு. கழகம்தான். உழைக்கும் மக்கள்தான். இங்கே காங்கிரஸ் ஆட்சி  செயல்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? நெய் வேலியையும், சேலத்தையும் சிதம்பரம் தவணை தவணையாக விற்பனை செய்திருப்பார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அம்பானி சென்னை வந்தார். முதல்வர் கலைஞரை  சந்தித்தார். சோழ மண்ட லத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வேண்டும் என்றார். தனியாரை அனு மதித்தால் அது தமிழகத்திற்குப் பாதகம் என்று கலைஞர் சொல்லிவிட்டார். அனுமதி தரவில்லை.

ஆனால் இங்கே காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும். தஞ்சையிலும்  திருவாரூரிலும் சுதந்திரமாக கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்திருப்பார் அம்பானி.

எனவே கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறியதற்கு திராவிட கட்சிகளின் ஆட்சிதான் காரணம். தமிழகத்தின்  நலன்கள் காக்கப்பட்டதற்கும் அந்த ஆட்சிகள்தான் காரணம்.

நாற்பது ஆண்டுகள் உத்திரப்பிரதேசத்திலும், பீகாரிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்றது. ஆனால் இன்றைக்குக் காணாமல் போய்விட்டன. என்ன காரணம்? எந்த வளர்ச்சியும் இல்லை.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியாம், அதனை வழிநடத்த ஒருங்கிணைப்புக் குழுவாம். இது சிதம்பரங்களின் சித்தாந்தம். புலி சைவமாகிறதாம். இன்றைக்கு ராஜஸ்தானிலும், அரியானாவிலும், டெல்லியிலும் காங்கிரஸ் ஆட்சிதான். தமிழகம் கற்றுக்கொள்கின்ற அளவில் அங்கே ஏதாவது திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா? இல்லை.

எந்தத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தவில்லை? "ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குகிறோம்.

தமிழக வழியில் நாங் களும் ஒருகிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று  கொ டுக்கப் போகிறோம்' என்கிறார் கேரளத்து மார்க்சிஸ்ட் முதல்வர்.

நூறு நாள் வேலைத் திட்டம்  தமிழகத்தில்தான் சிறப்பாக செயல்படுத்தப் படுகிறது என்று உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பாட்டில் இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டி யாக இருக்கிறது.

இப்படிச் சொல்வதால் குறைந்தபட்சம் ஒருங்கிணைப் புக் குழு என்பதனையெல்லாம் நாம் வேண்டாம் என்று சொல்ல வில்லை. அத்தகைய ஏற் பாட்டில்தான் இன்றைக்கு மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் இடதுசாரி அரசுகள் செயல்படு கின்றன.

மக்களுக்கான நலத்திட்டங்கள்தான் அங்கே குறைந்தபட்சத் திட்டங்கள். ஆனால் சிதம்பரங் கள் கூறும் குறைந்தபட்சத் திட்டங்கள் யாருக்காக வகுக்கப்படும்? அம்பானிகளுக்காகவா? டாடாக்களுக்காகவா?  வேதாந்திகளுக்காகவா? ஸ்டெர்லைட்டுகளுக்காகவா?

மீண்டும் சொல்கிறோம். பொதுவாக தேர்தலுக்கு முன்னரே கூட்டணி ஆட்சியென்றால் அதனைத் தமிழகம் ஏற்காது.

தேர்தலுக்குப் பின்னர்  நிலைமைகளைப் பொறுத்துத்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் கசக்கிப் பிழிந்து குதிரை ஏறுவதில்தான் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது.

4 comments:

vijayan said...

ஒரு காலத்தில் இந்திராவும் சிதம்பரமும் தான் புரட்சி வீரர்கள்,காமராஜ் எல்லாம் கடைந்தெடுத்த பிற்போக்கு என்று சோலை முழங்கினார் இன்று தாத்தா தான் லெனின் என்று சோலை சொல்வது எல்லாம் தாத்தா எறியும் எலும்பின் மகிமை.

ramalingam said...

காங்கிரஸை சொல்வது இருக்கட்டும். முதலில் இவர்கள்(திமுக) சுத்தமா?

okyes said...

//மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பாட்டில் இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டி யாக இருக்கிறது.// இது அதிமுக கொண்டாட வேண்டியது திரு. சோலை.
/// இன்று தாத்தா தான் லெனின் என்று சோலை சொல்வது எல்லாம் தாத்தா எறியும் எலும்பின் மகிமை./// இது சரியான பின்னூட்டமே.
*// காங்கிரஸை சொல்வது இருக்கட்டும். முதலில் இவர்கள்(திமுக) சுத்தமா?//* இதுவும் சரியான பின்னூட்டமே.
#// மக்களுக்கான நலத்திட்டங்கள்தான் அங்கே குறைந்தபட்சத் திட்டங்கள். ஆனால் சிதம்பரங் கள் கூறும் குறைந்தபட்சத் திட்டங்கள் யாருக்காக வகுக்கப்படும்? அம்பானிகளுக்காகவா? டாடாக்களுக்காகவா? வேதாந்திகளுக்காகவா? ஸ்டெர்லைட்டுகளுக்காகவா?//# பிறகேன் திரு.சோலை காங்கிரஸிடம் தமிழன் மானங்கெட்டு தொங்கவேண்டும்.

bandhu said...

இவ்வளவிற்கும் பிறகு அதே காங்கிரஸ் ஐ திமுக ஏன் தொங்கவேண்டும்?
//2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் டெல்லி, தமிழக அரசின் இல்லத்தில் தங்கியிருந்த கலைஞரை சோனியாவே வந்து சந்தித்தார். ஆனால் 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலம் சற்று கூடியதால் சோனியாவை சந்திக்க கலைஞர் செல்ல வேண்டியிருந்தது. இது தான் காங்கிரஸ் கட்சி யின் கலாச்சாரம்.//
2004 -ம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் பலமுடன் இருந்ததால் கருணாநிதி சோனியாவை தான் இருந்த இடத்திற்கு வர வழைத்து அமைச்சர் பதவி பேரம் செய்தார். ஆனால் 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலம் சற்று கூடியதால் சோனியாவை சென்று பார்த்து அமைச்சர் பதவி பேரம் செய்தார். இது தான் தி மு க வின் கலாசாரம்.
'செல்ல வேண்டியிருந்தது' என்று ஏன் புலம்புவானேன்? போனது பதவி பேரத்திற்கு! என்னமோ மக்களுக்கு நன்மை செய்ய போனமாதிரி..
எறியும் எலும்புக்கு குறைக்கும் நாய்கள்!